புதிய சொல்லாக்கம் !

ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

வியாழன், 25 ஜனவரி, 2024

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (62) புட்டில் = BOTTLE.

 

நமது வாழ்க்கையில் “பாட்டில்”கள் தவிர்க்கவியலாத ஒன்றாக ஆகிவிட்டன. மருந்து ”பாட்டில்”, தண்ணீர்ப் ”பாட்டில்”, எண்ணெய்ப் “பாட்டில்”, குளிர் பானப் “பாட்டில்”, பூச்சிமருந்துப் “பாட்டில்” எனப் பலவிதமான ”பாட்டில்”களைப் பயன்படுத்தி வருகிறோம் !

 

உடன்நலனைக் கெடுத்துக் கொள்வதில் தீராத தாகமுடைய ஒரு பகுதி மக்கள் மதுபானப் “பாட்டில்”களுடன் உறவாடுவதில் தனி இன்பம் காண்பதையும் நாம் அறிவோம். இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ”பாட்டில்”கள் கண்ணாடியாலும் (GLASS), ஞெகிழி (PLASTIC), கரிம நீரகம் (P.V.C), பீங்கான் (CERAMIC) போன்ற பொருள்களாலும் செய்யப்பெறுகின்றன !

 

பள்ளி மாணவன் ஒருவன் என்னிடம் ”அய்யா, பாட்டில் என்பது ஆங்கிலச் சொல் அன்றோ ? தமிழில் அதை எவ்வாறு சொல்வது ?” என்று வினவினான் !


அவன் இவ்வாறு கேட்டவுடன் சற்றுத் தடுமாறிப் போனேன். நாளை சொல்கிறேன் கண்ணா என்று சொல்லிவிட்டு, வீட்டிற்கு வந்து சிந்தனைக் குதிரையேறி உலாவரத் தொடங்கினேன். இடையில் ஒரு குளம்பி (COFFEE) அருந்தி சிந்தனைக் குதிரையைச் சீண்டிவிட்டேன். அது விரைந்து ஓடத் தொடங்கியது !

 

எனது அகவையில் 65 ஆண்டுகள் குறைந்து ஒரு நொடியில் பள்ளிப் பருவத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். ஒரு நாள் என் தந்தையார், என்னை அழைத்து கடைக்குச் சென்று ஒரு “புட்டி” மண்ணெண்ணெய் வாங்கி வருமாறு பணித்தார். கையில் ஒரு உருபா பணத் தாளையும், கண்ணாடிப் “பாட்டில்” ஒன்றையும் திணித்தார் !

 

கடைக்குச் சென்று ஒரு “புட்டி” மண்ணெண்ணெய் கேட்டேன். இலிட்டர் (லிட்டர்) அளவைகள் நடைமுறைக்கு வராத காலம் அது. நல்லெண்ணெய் முதலிய பிற எண்ணெய்கள் “சேர்” என்னும் கொள்ளளவிலும், மண்ணெண்ணெய் மட்டும் “புட்டி” என்னும் கொள்ளளவிலும் விற்கப்பட்ட காலம். அளவு “பாட்டில்” ஒன்றைக் கொண்டு ஒரு ”புட்டி” மண்ணெண்ணெய் நான் கொண்டு சென்ற “பாட்டிலில்” ஊற்றப்பட்டது !

 

கடைக்காரரிடம் கேட்டேன், அய்யா ! அது என்ன புட்டி என்னும் அளவு ?”


அவர் சொன்னார், தம்பீ ! ”பாட்டில்” என்ற சொல்லைத் தான் ”புட்டி” என்கிறோம். “புட்டி” என்பது மாறாத கொள்ளளவு கொண்ட ஒரு அளவு. இந்த அளவு “பாட்டில்” எல்லாக் கடைகளிலும் ஒரே கொள்ளளவு உடையதாகத் தான் இருக்கும்”.

 

கடைக்காரர், அந்தக் காலத்திலேயே தமிழில் ”புலவர்” பட்டம் பெற்றவர். அவர் என்னைப் பார்த்து, “தம்பீ ! தமிழில் “புட்டில்” என்று ஒரு சொல் இருக்கிறது. திருமுருகாற்றுப் படையில் “அம் பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு “ என்று ஒரு வரி (191) வரும். ”காட்டு மல்லிப் பூக்களைப் பறித்து புட்டிலில் சேகரித்து” என்று இதற்குப் பொருள்” !

 

கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலில் 80 ஆவது பாட்டில் “அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து” என்று ஒரு வரி உண்டு. அழகாகப் புனையப்பட்ட புட்டிலில் வைத்து என்று இதற்குப் பொருள்” !

 

அகநானூற்றில் 122 ஆவது பாடலில் “அரி பெய் புட்டில் ஆர்ப்ப...” என்று ஒரு வரி வருகிறது. அம்புகள் வைக்கப் பெற்ற புட்டில் என்று இதற்குப் பொருள்” !


உட்பக்கம் குழிவாக அமைந்த, பொருள்கள் வைக்கத் தக்க கலன் அக்காலத்தில் “புட்டில்” என்று வழங்கப் பெற்றிருக்கிறது !

 

அம்புகள் செருகி வைக்கும் புட்டில், பூக்கள் கொய்து சேகரிக்கும் புட்டில், காடுகளிலிருந்து தேனடைகளைச் சேகரிக்கும் புட்டில், கள் பெய்து வைக்கும் புட்டில் எனப் பல வகைகளில் அக்காலத்தில் புட்டில் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது” !

 

பொதுவாக உட்குழிவான வாய் குறுகிய குவளை அல்லது செம்பு போன்ற ஒரு கொள்கலனைத் தான் புட்டில் என்று அக்காலத்தில் வழங்கி வந்திருக்கின்றனர். இந்தப் புட்டிலின் வாய்ப்பகுதி (MOUTH) உடற்பகுதிக்கு இணையானதாகவும் அல்லது குறுகியதாகவும் பயன்பாட்டுக்குத் தக்கபடி இருந்திருக்கிறது” !

 

வணிகம் செய்வதற்காகவும், மதப் பரப்புரைக்காகவும், இந்தியாவுக்கு - குறிப்பாகத் தமிழ் நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் “புட்டில்” என்னும் சொல்லைத் தங்கள் நாட்டிற்குத் தத்து எடுத்துச் சென்று “பாட்டில்” என்று பெயர் சூட்டி வழங்கலாயினர். தமிழ் மொழியானது ஆங்கிலத்திற்கு இரவல் கொடுத்த எத்துணையோ சொற்களுள் “புட்டில்” என்பதும் ஒன்று” !

 

தமிழர்கள் “புட்டில்” என்பதை, “புட்டி” என்று சுருக்கி வழங்கலாயினர். குழந்தை துயில் கொள்ளும் “தொட்டில்” என்னும் சொல் சுருங்கி “தொட்டி” என்று வழங்கப் பெறுவதைப் போல், “புட்டில்” காலப்போக்கில் “புட்டி” ஆயிற்று என்கிறார் பாவாணர் தனது வேர்ச் சொற் கட்டுரைகள் என்னும் நூலில் (பக்.286)” !

 

புட்டில்” என்னும் சொல் அல்லாமல் ”மணிக்கலன்” என்ற சொல்லும் பண்டைக் காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ”மணிக்கலன் நிறைந்த மணம் நாறு தேறல்...” என்பது புறநானூற்றுப் பாடல் வரி (397:14). குறுந்தொகைப் பாடல் ஒன்று (193:1) மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன...” என்று “பாட்டில்” பற்றிய செய்தியை விளம்புகிறது !

 

பதிற்றுப் பத்து என்னும் தொகை நூலில் “மணிக்கலத்து அன்ன மா இதழ் நெய்தல் பாசடை..” என்னும் வரி “பாட்டில்” என்பதற்கு நேரான தமிழ்ச் சொல் “மணிகலன்” என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.” !

 

கடைக்காரரின் தெளிவான விளக்கம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது. தமிழ்ச் சொல்லான “புட்டில்” ஆங்கிலத்திற்குச் சென்று, அங்கு “பாட்டில்” என வழங்கப் பெறுவதை அறியாத நாம், இற்றைத் தமிழகத்தில் “பாட்டில்” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு, நேரான பொருள் தரும் தமிழ்ச் சொல்லைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். என்னே நம் அறியாமை !

 

இனி, பாட்டில்” என்பதைப் “புட்டி” என்றே அழைப்போம். இந்த இடத்தில், தடிமனான கண்ணாடி அணிந்த ஒருவரை “சோடாப் புட்டிக் கண்ணாடி” என்று கேலியாக அழைப்பதை ஒப்பிட்டுப் பாருங்கள் கேலிப் பேச்சில் மட்டும் “புட்டி” பயன்படுகிறது. பிற இடங்களில் “பாட்டில்” நிலைபெற்று விட்டது. “புட்டி” என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் வேறு சில சொற்களையும் பார்ப்போமா !.

 

-------------------------------------------------------------------

WATER BOTTLE...............= தண்ணீர்ப் புட்டி

OIL BOTTLE......................= எண்ணெய்ப் புட்டி

TONIC BOTTLE.................= நல்லிப் புட்டி

SYRUP BOTTLE................= நலங்குப் புட்டி

LIQUEUR BOTTLE............= மதுப் புட்டி

TABLET BOTTLE.............. = மாத்திரைப் புட்டி

CAPSULE BOTTLE............= குளிகைப் புட்டி

COOL DRINKS BOTTLE...= பானகப் புட்டி

MEDICINE BOTTLE...........= மருந்துப் புட்டி

MILK BOTTLE....................= பால்புட்டி

BOTTLE MILK....................= புட்டிப்பால்

BOTTLING PLANT.............= வளிம நிரப்பு ஆலை

---------------------------------------------------------------------------------

ஆக்கம் +  இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”புதுச்சொல் புனைவோம்”,வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு:2055: சுறவம் (தை) 11]

{25-01-2024}

----------------------------------------------------------------------------------