விரும்பும் பதிவைத் தேடுக.

செவ்வாய், 21 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (61) காலிகை =CALENDAR.


காலிகை = CALENDAR

------------------------------------------------------------------------------------------------

எந்தவொரு நிகழ்வையும் நினைவில் வைத்துக் கொள்ள நமக்குத் தேவை அஃது எப்பொழுது நிகழ்ந்தது என்பதை  அடையாளப்படுத்தும்  ஒரு குறியீடு ! இந்தியா எப்பொழுது விடுதலை பெற்றது ? இதை நமக்கு நினைவுபடுத்துவது 1947 என்னும் ஆண்டுக் குறியீடு !


எந்த மாதத்தில் விடுதலை பெற்றது ?  இதை அடையாளப் படுத்துவது ஆகத்து என்னும் மாதக் குறியீடு !  எந்த நாளில் விடுதலை பெற்றது என்பதை அடையாளப் படுத்துவது 15 என்னும் நாள் குறியீடு !

 

நான் எப்பொழுது வீட்டிலிருந்து அலுவலகம் புறப்பட்டேன் ? இதற்கு விடை சொல்வது “காலை” என்னும் வேளைக் குறியீடு ! அலுவலகம் எப்பொழுது இயங்கத் தொடங்குகிறது ? இதற்கு விடையளிப்பது “மணி” என்னும் சிறுகால் (சிறிய காலப் பகுதி) குறியீடு!


இத்தகைய குறியீடுகள் தான் மனிதனின் நினைவுகளைக் குழப்பத்திலிருந்து மீட்கின்றன ! இந்தக் குறியீடுகளை எழுத்து வடிவில் வைத்துக்கொண்டால் அவை நிலைத்து நிற்கும் என்பதை அறிந்த மனிதன், அதற்கு வாய்ப்பாக வடிவமைத்துக் கொண்டது தான் “காலண்டர்” (CALENDAR) !


நடைமுறையில் உள்ள “காலண்டர்”கள் இரண்டு வகைப்படும். அவை (01) அன்றாடம் நாளையும் கிழமையையும் காட்டும் “நாள்காட்டி” என்னும் “DAILY SHEET". (02) மாதப் பெயரையும், அம்மாதத்தில் உள்ள நாள்களையும், அந்த நாள்களுக்கு உரிய கிழமைகளையும் காட்டும் “மாதங்காட்டி” என்னும் “மதிகாட்டி” “MONTHLY SHEET" ! (மதி என்பதற்குப் பிற பொருள்களுடன் ”மாதம்” என்னும் பொருளும் உண்டு !


”காலண்டர்” என்பதை “நாள்காட்டி” என்னும் சொல்லால் அழைக்கிறோமே தவிர ”மதிகாட்டி” என்னும் சொல் இன்னும் வழக்கில் வரவில்லை. படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரது வாயிலும் புகுந்து புறப்படும் சொல் “காலண்டர்” !


ஆங்கிலேயர் அகன்றுவிட்டாலும்அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம் மட்டும் இன்னும் அகலவில்லைசரி ! காலண்டர் என்பதைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ?

 

”கால்” என்பதற்குத் தமிழில் பிற பொருள்களுடன் “காலம்” என்னும் பொருளும் உண்டு. “காலண்டர்” என்பது காலம் உரைக்கும் ஒரு கருவியல்லவா ? “இகை” என்றால் “கொடு” என்று பொருள். காலத்தை அல்லது காலத்தின் உட்கூறுகளை நமக்குச் செய்தியாகக் கொடுக்கும் கருவியை “கால் + இகை = காலிகை” என்று கூறுதல் தவறில்லையே !


நாம் பார்க்கும் அந்த நொடியில் அற்றை நாள் (அன்றைய நாளில்) அல்லது பிற்றை நாள் (பின்னொரு நாளில்) நிலவும் நாண்மீன் (நட்சத்திரம்), பிறை நிலை, கதிர்மதி நிலை (திதி), கிழமை, மாதம் முதலிய காலப் பகுதிகளைச் செய்தியாக நமக்குக் கொடுக்கும் கருவி என்பதால் இதைக் “காலிகை” என்று அழைத்தல் பொருத்தமானது !


உலகில் உள்ள ஒவ்வொரு பொருட்கும், மக்கள் உள்ளத்தில் எழும் ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு சொல் தோன்றுவது இன்றியமையாதது ஆகும். ஆயினும், ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு புதுச் சொல் அமைவது இயலாது. ஆதலல் பழஞ் சொற்களினின்றே புதுச் சொற்கள் திரித்துக் கொள்ளல் வேண்டும். கருத்துகள் பல்கப் பல்கச் சொற்களும் பல்க வேண்டி இருப்பதால், ஒரு மொழி முழு வளர்ச்சி அடைவதற்குப் பல்லாயிரக் கணக்கான திரிசொற்கள் தேவையாயுள்ளன.  (பாவாணரின் சொல்லாராய்ச்சிக்  கட்டுரைகள் நூல், பக்.90)

 

பாவாணரின் வழிகாட்டுதலுக்கு இணங்க “கால்” (காலம்) என்னும் சொல்லிலிருந்து “காலிகை” என்னும் புதிய சொல்லைத் திரித்து அதை ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் ”CALENDAR” என்னும் சொல்லுக்கு இணையான சொல்லாக அறிமுகப்படுத்துகிறேன் !


ஒரு புதிய சொல் உருவாக்கப்படும் போது, அதிலிருந்து பல கிளைச் சொற்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதாக அச்சொல் நெகிழ்ச்சித் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். "CALENDAR" என்பதற்கு இணையாக “நாட்காட்டி”யை இருத்திக் கொண்டால், CALENDAR YEAR என்பதை நாட்காட்டி ஆண்டு என்று சொல்ல வேண்டிவரும். இச்சொல் பொருத்தமானதாக இல்லை !

  

எனவே கிளைச் சொற்களை உருவாக்க எந்தவகையிலும் இடையூறு தராத  காலிகை என்னும் சொல்லை நாம் புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் ! “காலிகையிலிருந்து உருவாகும் கிளைச் சொற்கள் அடியில் தரப்பட்டுள்ளனஅவற்றைப் பலுக்கிப் பாருங்கள் !

 

காலிகை” என்னும் சொல் முற்றிலும் புதியது என்பதால் அதை ஏற்றுக் கொள்ளச் சிலருக்குத் தயக்கம் இருக்கும்தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும்போகப் போகப் பழகிவிடும்முற்றிலும் புதிய சொல்லான “CORONA”வை நாம் தயக்கமின்றி ஏற்கவில்லையா ? சுனாமியை (TSUNAMI) ஏற்கவில்லையா ? “காலிகை”யை ஏற்பதிலும் அத்தகைய நெகிழ்ச்சித் தன்மையை நாம் காண்பிக்க வேண்டும் !


"காலிகை” என்னும் சொல் வடிவில் சிறியது; பொருளில் பொலிவுடையது; ஓசையில் இனியது ! எனவே “காலிகையை இனி நாம் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் !


------------------------------------------------------------------------------------------------

 

      CALENDAR....................................= காலிகை  

     DAILY CALENDAR.......................= அற்றைக் காலிகை

     DAILY  SHEET................................= அற்றைக் காலிகை

     MONTHLY  CALENDAR...............= மாதக் காலிகை

     MONTHLY  SHEET.........................= மாதக் காலிகை

     CALENDAR MONTH.....................= காலிகை மாதம்

     CALENDAR YEAR.........................= காலிகை ஆண்டு

 

 ---------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

”புதிய சொல்லாக்கம்” வலைப்பூ,

[தி.பி.2052, சிலை (மார்கழி) 06]

{21-12-2021}

------------------------------------------------------------------------------------------------

காலிகை =CALENDAR


  

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (60) ஊனடிசில் = BRIYANI


ஊனடிசில் =  BRIYANI

--------------------------------------------------------------------------------------

ஊன்சோறு என்னும் சொல்லைச் சங்ககாலப் புலவர்கள் பல இலக்கியங்களில் எடுத்து ஆண்டிருக்கின்றனர். ஓரிரண்டை மட்டும் இங்குப் பார்ப்போம் !


”ஊன்சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்” என்பது புறநானூற்றுப் பாடல்-33, வரி.14.”


அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் என்று இதே புறநானூறு பாடல் 113, வரி 02-ல் சொல்கிறது !

 

ஆடுற்ற ஊன்சோறு”, என்கிறது மதுரைக் காஞ்சி (பாடல் வரி 35). இதே மதுரைக் காஞ்சியில் இன்னொரு இடத்தில்புகழ்படப் பண்ணிய பேர்  ஊன் சோறும் (பாடல் வரி 533) என்னும் வரி வருகிறது !

 

எடுத்துக் காட்டுக்காக இரண்டு இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைச் சுட்டியுள்ளேன். ஊன்சோறு என்றால் என்ன ?


ஊன் என்றால் தசை என்று பொருள்.  இஃதன்றி நிணம்கொழுப்புபுலால்இறைச்சிஉடல் என்றெல்லாம்  பொருள் சொல்கிறது கழகத் தமிழ் அகராதி ! தசை என்பதை “சதை” என்று சொல்வது இக்கால வழக்கு !

 

ஊன் கலந்து செய்யப்படும் சோறு ஊன்சோறு” !இக்காலத்தில் “பிரியாணி” என்று சொல்கிறோமே அதைத் தான் அக்காலத்தில் ஊன்சோறு (ஊன் = கறி) என்று வழங்கி இருக்கின்றனர் ! ஊன்சோற்றை ஆக்கும் முறையில் பண்டைக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். அதில் சேர்க்கும் நறுமணப் பொருள்களின் அளவில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். செய்ம்முறையில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். ஆனால் அக்கால ஊன் சோறுதான் இக்கால பிரியாணிஎன்பதில் ஐயமிருக்க முடியாது !

 

சோறு என்பதைக் குறிக்கும் இன்னொரு சொல் அடிசில்”. நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் என்பது புறநானூறு (188).  ஊன்சோறு (கறி கலந்த சோறு) என்பதை ஊனடிசில்என்று சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும்.  எனவே பிரியாணிஎன்பதைத் தமிழில் ஊனடிசில்என்று மொழியாக்கம் செய்தல் பொருத்தமுடையதாக இருக்கும்.

 

”ஊனடிசில்” என்பது பொதுச்சொல். ஊனடிசிலில் பலவகை உள்ளன. ஒவ்வொரு வகையையும் குறிப்பிட வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தலாம். ”மட்டன் பிரியாணி” என்பதை ”ஆட்டூன் அடிசில்” (ஆடு + ஊன் + அடிசில் = ஆட்டூன் அடிசில்) என்று சொல்லலாம். அதாவது ஆட்டுக் கறி கலந்த சோறு. ஆட்டுக்கு இன்னொரு பெயர் “மறி”. எனவே மறி + ஊன் + அடிசில் = மறியூன் அடிசில் ! இதை இன்னும் சுருக்கமாக ”மறியடிசில்” எனலாம் !

மாட்டுக்  கறி கலந்து செய்யப்படும் பிரியாணிக்கு பீப் (Beef)  பிரியாணிஎன்று பெயர். மாட்டுக்கு வேறு பெயர் ஆன்”. எனவே ஆன் + ஊன் + அடிசில் = ஆனூன் அடிசில்; அதாவது ஆன் கறிக் கலந்த சோறு. இதைச் சுருக்கமாக ஆனடிசில்எனலாம் !

 

சிக்கன் பிரியாணி என்பது  கோழிக் கறிக் கலந்த சோறு. இதைக் கோழியூன் அடிசில் எனலாம். இதை இன்னும் சுருக்கமாக கோழியடிசில்” என்று சொல்லலாம். முட்டை பிரியாணி என்பது ”வேக வைத்த முட்டைக் கரு கலந்த சோறு”. இதை  “முட்டையூன் அடிசில்”,அல்லது சுருக்கமாக “முட்டையடிசில்” என்று சொல்லலாம் ! முட்டையின் ஓட்டுக்குள் இருப்பது நீர்ம வடிவிலான ஊன் (இறைச்சி) தானே ! ஆகையால் ”முட்டையூன்” அடிசில் - சுருக்கமாக “முட்டையடிசில்” என்பது பொருத்தமன்றோ !

 

சரி ! “வெஜிடபிள் பிரியாணி” என்பதை எப்படி அழைப்பது என்ற ஐயம் வருகிறதா ? அதையும் பார்ப்போம் ! காய்களின் உள்பகுதியில் என்ன இருக்கிறது ? “சதை “ அல்லவா ?  நல்ல சதைப் பற்று உள்ள முருங்கைக் காய் என்னும் உலக வழக்கை நோக்குக ! சதைதசைஊன் என்பவை ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள். எனவே சதை என்பது “ஊன்” அன்றி வெறென்ன ? ஆகையால் “வெஜிடபிள் பிரியாணி” என்பதைக் “காயூன் சோறு” (காய் + ஊன் + சோறு = காயூன் சோறு) எனலாம். இதை இன்னும் சுருக்கமாக ”காயடிசில்” என்று சொல்லலாமே !


நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற அழகிய சொற்களை வழக்கறச் செய்துவிட்டுஆங்கிலச் சொற்களை இரவல் வாங்கிப் பயன்படுத்துவது நமக்கு அழகல்லவே  !

 

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்டார் பாரதியார்அவர் பிறந்த நாளில் அவர் படத்திற்கு மாலையிட்டு வணங்கினால் மட்டும் போதுமா ? அவரது கனவை நனவாக்க வேண்டாவா ?

 

பாரதியின் கனவுக்கு  வடிவம் தர இன்றே உறுதி ஏற்போம் ! இனி ”பிரியாணியைத் துறப்போம்; “ஊனடிசில்” உண்போம் ! பண்டை இலக்கியங்கள்  “ஊன்சோறுஎன்னும் சொல்லை ஆண்டாலும், நாம் அதைச் சற்று மேம்படுத்தி   “ஊனடிசில்என்று உரைப்போமே   !

 

பொதுச் சொல்லான பிரியாணிஎன்பதை மட்டும் ஊனடிசில்என்று உரைத்தால் சுவையாக இருக்காதா என்ன ?

 

-------------------------------------------------------------------------------------

 

                       BRIYANI .............................=  ஊனடிசில் 

                       MUTTON BRIYANI...........=  மறியடிசில் 

                       CHICKEN BRIYANI..........=  கோழியடிசில்

                        BEEF BRIYANI..................=  ஆனடிசில்

                        EGG BRIYANI....................=  முட்டையடிசில்

                        VEGETABLE BRIYANI....=  காயடிசில் 

--------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி.2052, சிலை (மார்கழி) 06]

{21-12-2021}

--------------------------------------------------------------------------------------

ஊனடிசில் = BRIYANI