விரும்பும் பதிவைத் தேடுக.

வியாழன், 16 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (18) உ.மு = A.M. ; உ.பி = P.M.

 

 உ.மு (உச்சிக்கு முன்) = A.M
 .பி (உச்சிக்குப் பின்) = P.M

------------------------------------------------------------------------------------

 

ஒரு நாளுக்குரிய 24 மணி நேரத்தை இரண்டாகப் பகுத்து இருக்கிறார்கள் மேலை நாட்டு அறிஞர்கள் !

 

ஒவ்வொரு நாட்டிலும் எந்த வேளையில் கதிரவன் முழுப் பேரொளியுடனும், வலிமையான வெப்ப வீச்சுடனும் திகழ்கிறதோ அந்த வேளைக்கு உச்சி வேளை (MERIDIAN) என்று பெயரிட்டு இருக்கிறார்கள் !


 

எந்த நாட்டிலும் உச்சி வேளை என்பது நண்பகல் 12 00 மணியைத் தான் குறிக்கும். இருபத்து நான்கு மணி நேரம் உடைய ஒரு நாள்பொழுதை உச்சி வேளைக்கு முன்புள்ள பகுதி (Anti Meridian), உச்சி வேளைக்குப் பின்புள்ள பகுதி (Post Meridian) என இரு பகுதிகளாகப் பார்க்கப்படுகிறது !

 

நள்ளிரவு 12- 00 மணி முடிந்தவுடன்தொடங்கும் உச்சிக்கு முந்திய பொழுது ( A.M ) நண்பகல் 12 – 00 மணி வரை தொடர்கிறது. அது போல் நண்பகல் 12 – 00 மணி முடிந்தவுடன் தொடங்கும் உச்சிக்குப் பிந்தைய பொழுது( P.M ) நள்ளிரவு 12 – 00 மணி வரை தொடர்கிறது !

 

மேனாட்டார் வகுத்துள்ள இந்த உச்சிக்கு முந்திய பொழுது, உச்சிக்குப் பிந்தைய பொழுது ஆகியவற்றை நாமும் A.M, P.M என்று குறிப்பிட்டுப் பின்பற்றி வருகிறோம் !

 

A.M, P.M என்பதற்கு முற்பகல், பிற்பகல் என்ற சொற்கள் முழுமையாகப் பொருந்தி வரவில்லை. ஏனெனில் முற்பகல் என்பது ஆறு மணி நேரம் தான். அதுபோல் பிற்பகலும் ஆறு மணி நேரம் தான். ஆனால் A.M என்னும் Anti meridian என்பது 12 மணி நேரமும் P.M. எனப்படும் Post Meridian என்பது 12 மணி நேரமும் உடையவை !

 

எனவே A.M. என்பதை உ.மு. (உச்சிக்கு முன்) என்றும், P.M. என்பதை உ.பி  ( உச்சிக்குப் பின் ) என்றும் இனி எழுதுவோமே !

 

==================================================

 

A.M. (Anti meridian)

= உ.மு. (உச்சிக்கு முன்)

P.M.( Post Meridian)

= உ.பி. (உச்சிக்குப் பின்)

8-00 A.M.

= 8-00 உ.மு

8-00 P.M.

= 8-00 உ.பி

12-00 NOON

= 12-00 ந.ப (நண்பகல்)

12-00 MID NIGHT

=12.0 ந.இ (நள்ளிரவு)

 

==================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052, சிலை (மார்கழி) 01]

{16-12-2021}

===================================================

உ.மு = A.M.  ; உ.பி = P.M.


புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (17) துச்சில் = GUEST HOUSE.

 

துச்சில் = GUEST HOUSE 

-------------------------------------------------------------------------------------------------

அரசின் உயர் அலுவலர்களோ, அமைச்சர்களோ அலுவல் முறையாக வெளியூர் செல்லும்போது தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதியாக, அரசின் சார்பில் விருந்தினர் மாளிகைகள் கட்டப்பட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள் !

 

இந்த ஓய்வு இல்லங்களை ஆங்கிலத்தில் பலவாறாக அழைக்கின்றனர். GUEST HOUSE, REST HOUSE, GUEST ROOM, INSPECTION BUNGLOW, TOURIST HOME, TOURIST BUNGLOW என ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. இந்த இல்லங்களின் பயன் தான் என்ன ? தங்கி ஓய்வு எடுப்பது தானே ?


 

தங்கி ஓய்வு எடுக்கும் இல்லங்களுக்குத் தமிழில் துச்சில்என்ற சொல் முன்பு பயன்பாட்டில் இருந்தது !

 

 

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு ? *

..................................(குறள்:340)

 

பிச்சை புக்குண்பான் பிளிறாமை முன்னினிதே

துச்சில் இருந்து துயர்கூறா மாண்பினிதே **

.................................(இனியவை நாற்பது:39)

 

பூதம் காக்கும் புகலருங் கடிநகர்

தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்***

.................................(பட்டினப் பாலை:58)....

 

புற்றுவன் மீகமென்ப புகுமொதுக் கிடமே துச்சில்****

.........................(சூடாமணி நிகண்டு.)

 

 

========================================================

 

துச்சில் = தங்கி இருந்த (உயிருக்கு)

** துச்சில் = (சொந்த வீட்டில்) தங்கி இருந்து

*** துச்சில் = தங்குமிடத்தை (அடையும்)

**** துச்சில் = ஒதுக்கிடம்

 

========================================================

 

துச்சில் என்னும் தமிழ்ச்சொல் இருக்கையில் நாம் விருந்தினர் மாளிகை”, ”ஓய்வு இல்லம்”, ”விருந்தினர் அறை”, ”ஆய்வு மாளிகை”, “சுற்றுலா விடுதி”, “சுற்றுலா மாளிகைஎன்றெல்லாம் ஆங்கிலச் சொற்களை மொழி பெயர்ப்புச் செய்து கொண்டிருக்கிறோம் !

 

துச்சில் என்ற சொல்லை அரியணையில் அமர்த்துவோம் .விருந்தினர் மாளிகைபோன்ற நீண்ட வடிவம் உடைய சொற்களுக்கு ஓய்வு கொடுப்போம். முன்னே தலையாட்டிக் கொண்டு செல்லும் செம்மறி ஆட்டினைப் பின் தொடர்ந்து மற்ற ஆடுகளும் அதே போல் தலையாட்டிக் கொண்டு செல்வதைப் போல, நாமும் செல்ல வேண்டாமே !

 

========================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ; 2050: சிலை (மார்கழி) 01]

{16-12-2021)

=======================================================

துச்சில் = GUEST HOUSE.


 

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (16) அழலி = IRON BOX.

 

                         அழலி = IRON BOX

--------------------------------------------------------------------------------------

 

இஸ்திரிப் பெட்டி என்று சொல்லப்படும் ஆடைகள் தேய்ப்புப் பெட்டியில் இரண்டு வகையுண்டு.. அந்தக் காலத்தில் சலவைத் தொழிலாளிகள் பயன்படுத்திய இஸ்திரிப் பெட்டிகள் பித்தளையால் ஆனவை !

 

இதில் வெப்பமூட்டுவதற்குக் கரி பயன்படுத்தப் பட்டது. பிற்காலத்தில் மின்விசை பயன்பாட்டுக்கு வந்த பின்பு தயாரிக்கப் பெற்ற இஸ்திரிப் பெட்டிகள் துருப் பிடிக்காத இரும்பினால் செய்யப் பெற்றவையாக இருந்தன !

 

இஸ்திரிப் பெட்டியின் அடிப்பாகம் கனமான மாழைத் தகட்டினால் ( Metal Bottom) ஆனது. இந்த அடிப்பாகம் நெருப்பினாலோ அல்லது மின் விசையினாலோ வெப்பமூட்டப் படும்போது, அது கணிசமான அளவுக்குச் சூடேறுகிறது !


 

சுருக்கங்கள் உள்ள துணி சற்று ஈரமாக்கப் பட்டு, அதன் மேல் இஸ்திரிப் பெட்டியை வைத்து முன்னும் பின்னும் இழுத்துத் தேய்க்கும்போது, துணியில் உள்ள சுருக்கங்கள் நீங்கி துணி விறைப்பாகக் காணப்படும் !

 

எந்த வகை இஸ்திரிப் பெட்டியானாலும், அதைப் பயன்படுத்துவதற்கு வெப்பம் தேவை. வெப்பம் எங்கிருந்து உண்டாகிறது ? வெப்பத்தின் மூலவடிவம் அழல். அழலில் இருந்துதான் உண்ணம் (உஷ்ணம்) பிறக்கிறது !

 

அழல் என்பதற்கு நெருப்பு, வெப்பம், தீக்கொழுந்து, எரிவு, கொதிப்பு என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. அழல் இருக்குமிடத்தில் வெப்பம் இருக்கும். இரண்டும் இரட்டைப் பிறவிகள் !

 

கரியினாலோ அல்லது மின் விசையினாலோ இஸ்திரிப் பெட்டி வெப்பமூட்டப் படும்போது அதற்கு மூலதாரமாக அங்கு அமைவது அழல். அழலின் பயனால் இயக்கப் படும் பெட்டியை அழலிப் பெட்டி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா ?

 

இனி இஸ்திரியைத் தூக்கிப் பரண் மீது வைத்துவிட்டு அழலியைக் கையில் எடுப்போம். அழலிஎன்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் !

 

==================================================


IRON BOX


      = அழலி

ELECTRIC  IRON  BOX

      = மின்னழலி


CHARCOAL  IRON  BOX


      = கரியழலி

STEAM  IRON  BOX 

      =ஆவியழலி

 

===================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052: சிலை (மார்கழி) 01]

{16-12-2021}

===================================================

அழலி = IRON BOX.







 

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (15) ஊதை = AIR COOLER.

 ஊதை = AIR  COOLER  

----------------------------------------------------------------------------------------------

கோடைக் காலத்தில் வீட்டுக்குள் வெப்பம் மிகுதியாக இருக்கும். மின் விசிறி எவ்வளவு சுழன்றாலும் காற்றுதான் வருமே தவிர அதுவும் வெப்பக் காற்று தான் வருமே தவிர குளிர்க் காற்றுக் கிடைக்காது. குளிர்க் காற்றை விரும்புவோர், ஏர் கூலரைப் பயன் படுத்துகிறார்கள். ஏர் கூலர் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் ?

 

வாடைக் காற்றுக்கு குளிர்ச்சி மிகுதி. தமிழில் இதை ஊதைக் காற்று என்று சொல்வார்கள்.

====================================================

வரைமல்க, வானம் சிறப்ப, உறைபோழ்ந்து

இருநிலம் தீம்பெயல் தாழ விரைநாற

ஊதை உளரும் நறும்தண்கா பேதை

பெருமடம் நம்மாட்டு உரைத்து !

==========================================

(நூல் : கார் நாற்பது. பாடல் எண் : 30)

============================================

 

பொருள் :

-----------------

 

கலைகள் வளம் நிறைய, வானகம் சிறப்பு எய்த, இனிய மழை பொழிய, எங்கும் நறுமணம் கமழ, ஊதைக் காற்றானது, தலைவியின் அழகையும் இளமையையும் நமக்குச் சொல்ல மலர்ச் சோலையில் காத்துக் கொண்டிருக்கிறது. தேரினை விரைந்து செலுத்துவாயாக !

 

 

=====================================================

ஊதை என்ற சொல்லாட்சி குளிர்க் காற்றின் குணத்தை இங்கு குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஏர் கூலர் என்பதை இனி நாம் ஊதைப் பொறி அல்லது சுருக்கமாக “ஊதை” என்றே சொல்லிப் பழகுவோம்.

=====================================================


----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052, சிலை (மார்கழி) 01)

{16-12-2021)

---------------------------------------------------------------------------------------

ஊதைப்பொறி = AIR COOLER