ஆளி = SWITCH.
-------------------------------------------------------------------------------------
ஆள் ( Person ) என்னும் சொல் ஒரு தனி நபரையும்
குறிக்கும்; ”ஆளுதல்” ( To Rule ) என்ற
கருத்தையும் குறிக்கும். தனி நபரைக் குறிக்கும் “ஆள்”
என்னும் பெயர்ச் சொல்லின் அடிப்படையில் பல புதிய பெயர்ச் சொற்கள்
பிறக்கின்றன. சிலவற்றைப் பாருங்கள் !
கூட்டு + ஆள் + இ = கூட்டாளி
நோய் + ஆள் + இ = நோயாளி
தொழில் + ஆள் + இ = தொழிலாளி
( “இ” என்பது விகுதி)
”ஆள்” என்பது ஏவல் வினை. இந்த வினைச்
சொல்லுக்கு “ஆட்சி செய்” என்று பொருள்.
இந்த வினைச் சொல்லின் அடிப்படையில் “ஆட்சி”, “ஆட்சியர்”, “ஆளுநர்” போன்ற
பெயர்ச் சொற்கள் உருவாகின்றன !
“மாவட்ட ஆட்சியர்” என்று சொல்கிறோம். அவர் யார் ?
ஒரு மாவட்ட நிர்வாகத்தையே தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பவர்.
“ஆளுநர்” என்பவர் ஒரு மாநில
நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். “ஆட்சி”
புரிதல் என்றால் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் என்று
பொருள் !
“ஆள்” என்னும் வினைச்சொல்லின் அடிப்படையில்
தோன்றும் பெயர்ச்சொல் உயர் திணையாக இருந்தால் “ஆட்சியர்”,
என்றோ “ஆளுநர்” என்றோ
சொல்கிறோம். அதுவே அஃறிணையாக இருந்தால் “ஆளி” என்று தான் சொல்ல வேண்டும் !
ஒரு மின் சுற்றில் சில மின் விளக்குகள் இணைக்கப் பட்டுள்ளன. அந்த
விளக்குகளை எரிய வைப்பதற்கோ அல்லது அமர்த்துவதற்கோ ( OFF ) வசதியாக
ஒரு சுவிச் (Switch) அந்தச் சுற்றில் கூடுதலாக இணைக்கப்
படுகிறது. இப்பொழுது அந்த சுவிச்சின் பணி என்ன ?
அந்த மின் சுற்றில் மின்னோட்டத்தை அனுமதித்து விளக்குகளை எரிய
வைப்பதும் அந்த சுவிச் தான்; மின்னோட்டத்தைத் துண்டித்து
விளக்குகள் (எரியாமல்) அமர்த்துவதும் அந்த சுவிச் தான். வேறு வகையில் சொன்னால்,
அந்த மின் சுற்றில் செல்லும் மின்னோட்டத்தையும், இணைக்கப் பட்டுள்ள விளக்குகளையும் கட்டுப்படுத்தி ஆளும் பணியை சுவிச்
செய்கிறது !
”ஆளுதல்” என்றால் தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருத்தல் என்பதை முன் பத்தியில் பார்த்தோமல்லவா ? இணைக்கப்
பட்டுள்ள மின் சுற்றினை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்
சுவிச்சை ” ஆளி “ என்று சொல்லுதல்
பொருத்தமானது தானே ?
“ஆளி” என்ற சொல்லுக்கு “ஆள்வோன்”,
யாளி, சிங்கம், என்று பல
பொருள்களைச் சொல்கிறது தமிழகராதி. சுவிச் என்பது அஃறினைச் சொல் என்பதால் “ஆள்வோன்” என்று சொல்ல முடியாது. “ஆளி” என்று தான் சொல்ல முடியும். “ஆளி” என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற
சொற்களையும் பார்ப்போமா !
=======================================================
SWITCH |
= ஆளி |
FLUSH SWITCH |
= பதி (வகை) ஆளி |
TUMBLER SWITCH |
= புடை (வகை) ஆளி |
CONCEALED SWITCH |
= பொதி (வகை) ஆளி |
SINGLE POLE SWITCH |
= ஒரு முனை ஆளி |
DOUBLE POLE SWITCH |
= இரு முனை ஆளி |
ONE WAY SWITCH |
= ஒரு வழி ஆளி |
TWO WAY SWITCH |
= இரு வழி ஆளி |
INTERMEDIATE SWITCH |
= இடை(வழி) ஆளி |
TOGGLE SWITCH |
= பதுங்கு ஆளி |
BED SWITCH |
= பாயல் ஆளி |
MAIN SWITCH |
= முதன்மை ஆளி |
PORCELAIN SWITCH |
= பீங்கான் ஆளி |
BAKELITE SWITCH |
= பயின்கரி ஆளி |
SOCKET SWITCH |
= குதை ஆளி |
PULL – PUSH SWITCH |
= அமுக்கிழு ஆளி |
ROTARAY SWITCH |
= ஊர்முனை ஆளி |
RELAY SWITCH |
= ஏவு ஆளி |
REVERSIBLE SWITCH |
= இட வல ஆளி |
=======================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்
"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[திஆ: 2052, நளி (கார்த்திகை) 27]
{13-12-2021)
======================================================
ஆளி = SWITCH. |