ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

வெள்ளி, 3 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (06) குந்தம் = PUNCH

 


குந்தம் = PUNCH 

----------------------------------------------------------------------------

” குல் “ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் “ குந்தம் “. குல் > குன் > குந்து > குந்தம். “குல்” என்னும் வேர்ச்சொல் “குத்துதல்” என்னும் கருத்தைத் தழுவிய சொல் !

குல் > குள் > குளவி = கொடுக்கு
போன்ற உறுப்பினால் கொட்டும் தேனீ
குல் > கள் > கள்ளி = குத்தும் முட்செடி
குல் > கிள் > கிளி =கிள்ளும் அலகுடைப் பறவை
குல் > குன் > குந்து > குந்தம் = குத்தும் கருவி.



"குந்தம் "என்பது குத்தும் தொழிலுக்குப் பயன்படுத்தப் பட்ட ஒரு கருவி.


”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப் பாட்டு என்னும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வரி !(வரி : 41)

”குந்த மலியும் புரவியான்“ என்பது புறப் பொருள் வெண்பா மாலை.  (4:7)

“வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி  ! (1678).


பொறியியல் பணி மனைகளில் மாழை (Metal) வில்லைகளில் அல்லது தளங்களில் ஒரு ஆழமான புள்ளியையோ அல்லது வட்டத்தையோ அல்லது எழுத்தையோ அல்லது இலக்கத்தையோ அல்லது உருவத்தையோ அழுத்தமாகக் குத்திப் பதிவதற்கு ” பஞ்ச் “ எனப்படும் சிறு கருவி பயன்படுத்தப் படுகிறது !


மாழைத் தளத்தில் “ பஞ்ச் “ சின் முனையை வைத்து, அதன் தலைப் பகுதியில் சுத்தியால் (Hammer) ஓங்கித் தட்டும்போது, “பஞ்ச்” சின் முனை மாழைத் தளத்தில் குத்தி இறங்கி, தனது தடத்தைப் பதிக்கிறது! !


இவ்வாறு குத்தித் தடம் பதிக்கும் கருவியைக் “ குந்தம் “ என்று அழைப்பது சாலப் பொருத்தமே. “பஞ்ச்” என்னும் பெயரைப் பஞ்சாய்ப் பறக்க விட்டு விட்டால், “குந்தம்” நம்மிடம் வந்து குந்திக் கொண்டு உதவிகள் செய்யாதா ?


வாருங்கள் நண்பர்களே ! குந்தம் என்னும் சொல்லின் அடிப்படையில் பிறக்கும் ஏனைய சொற்களையும் கூப்பிட்டுக் கொஞ்சி மகிழலாம் !!


================================================

 

               PUNCH................................= குந்தம்
               BELL PUNCH......................= மணிக் குந்தம்
               CENTER PUNCH.................= மையக் குந்தம்
               DOT PUNCH........................= புள்ளிக் குந்தம்
               FIGURE PUNCH..................= உருக் குந்தம்
               HOLLOW PUNCH................= புழல் குந்தம்
               LETTER PUNCH..................= மொழிக் குந்தம்
               NUMBER PUNCH................= இலக்கக் குந்தம்
               NAIL PUNCH........................= ஆணிக் குந்தம்
               PRICK PUNCH.....................= கூர்க் குந்தம்
               PIN PUNCH..........................= ஊசிக் குந்தம்


 

==================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ; 2052, நளி (கார்த்திகை) 17]

{03-12-2021}

 

==================================================

குந்தம் = PUNCH


 

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (05) கயம் = CARROM


கயம் = CAROM 

-------------------------------------------------------------------------------------

கேரம் (Carom) என்பது உள்ளரங்க விளையாட்டுகளில் ஒன்று. பெரும்பாலும் அனைத்து நண்பர்களும் பள்ளிப் பருவத்தில் இதை விளையாடி இருப்பீர்கள் !

 

கேரம் விளையாட்டில் சவுக்கமான (Square sized) ஒரு பலகை இருக்கும் அதன் நாற்புறமும் விளிம்புகளில் வரம்புச் சட்டங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். பலகையின் நான்கு பக்க மூலைகளிலும் ஓட்டைகள் இருக்கும். விளையாடுவதற்காக 9 வெள்ளைக் காய்களும், 9 கறுப்புக் காய்களும் ஒரு சிவப்புக் காயும், ஆக மொத்தம் 19 காய்கள் இருக்கும் !

 

பலகையின் மையத்தில் காய்களை வைத்து அடிசில் (Striker) ஒன்றினால் அடித்துப் பலகையின் மூலைகளில் உள்ள குழியில் காய்களை வீழ்த்த வேண்டும். இருவரோ, நால்வரோ விளையாடும் இந்த விளையாட்டுக்கு என விதி முறைகள் வகுக்கப் பட்டுள்ளன !

 

இந்த விளையாட்டின் உள்ளார்ந்த பொருள் என்ன ? காட்டில் யானைக் கூட்டம் ஒன்று உள்ளது. மனிதனுக்குக் கட்டுப்படாத, பழகாத யானைகள். 9 ஆண் யானைகள்; 9 பெண் யானைகள்; இக்கூட்டத்தின் தலைவனான கொம்பன் யானை ஒன்று. இவற்றைப் பிடித்துக் கொண்டு வந்து வேலைக்குப் பயன்படுத்த வேண்டும் !

 

இவற்றை எப்படிப் பிடிப்பது ? வனத்துறையினர் கையாளும் முறை தான். காட்டில் ஆங்காங்கே ஆழமான குழிகள் தோண்டப்பட்டு, அவை இலை தழைகளால் மூடப்பட்டு இருக்கும். பழக்கப் படுத்தப் பட்ட யானை ஒன்றைக் கொண்டு, காட்டு யானைகள் விரட்டப்படும் !

 

பயந்து ஓடும் காட்டு யானைகள் இலை தழைகளால் மூடப்பட்டிருக்கும் குழி மீது கால் வைத்ததும், இலை தழைகள் உள்வாங்கி யானையைக் குழிக்குள் வீழ்த்தி விடும் !

 

கேரம் பலகையின் நடுவில் வைக்கப்படும் காய்கள் அடிசில் (அடி + சில் = அடிசில்) (STRIKER) கொண்டு அடித்து விரட்டப்பட்டு மூலைகளில் உள்ள குழிகளில் வீழ்த்தப்படுகின்றன. பழகிய ஒரு யானையைக் கொண்டு பழக்கப்படாத காட்டு யானைகளை விரட்டிக் குழிகளில் வீழ்த்திப் பிடிப்பது போல, கேரம் விளையாட்டில் ஒரு ஸ்டிரைக்கரைக் கொண்டு பலகையில் உள்ள காய்கள் அனைத்தும் அடித்து விரட்டப்பட்டுக் குழிக்குள் வீழ்த்தப் படுகின்றன! 

 

கேரம் விளையாட்டும், காட்டில் யானை பிடிப்பதும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்தீர்களா ? மைசூர்க் காடுகளில் இப்போதும் நடைபெறுகின்ற இத்தகைய யானை பிடிக்கும் நிகழ்ச்சிக்கு கெட்டா ஆப்பரேஷன் (Keddah operation) என்றுபெயர் !

 

ஒரு யானையைக் கொண்டு பல யானைகளை விரட்டிக் குழிக்குள் தள்ளிப் பிடிப்பது போல, கேரம் விளையாட்டில் ஒரு ஸ்டிரைக்கரைக் கொண்டு பல காய்களை அடித்து விரட்டிக் குழிக்குள் தள்ளி வெற்றி பெறுவது அமைந்துள்ளது அல்லவா ?

 

ஆகையால் கேரம்என்பதைக் கயம்என்று தமிழாக்கம் செய்யலாம். . யானைக்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களுள் கயம்என்பதும் ஒன்று. எனவே கேரம்என்பதை இனி கயம்என்போம் !

 

கயம் என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற துணைச் சொற்களையும், தொடர்புடைய ஏனைய சொற்களையும் பார்ப்போமா !!

 

=================================================


                          CARROM..............................= கயம்
                          CARROM BOARD................= கயப் பலகை
                          CARROM TOURNAMENT....= கயப் போட்டி
                          STRIKER........................= அடிசில் (அடி+சில்)
                         
COINS...................................= காய்கள்

=================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்

“புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ.

[தி.ஆ: 2052,நளி (கார்த்திகை) 17]

{03-12-2021}

 

=================================================

கயம் = CARROM