-----------------------------------------------------------------------------------------------
உணவுப் பொருள்களான அரிசி, காய்கள், கிழங்கு, கீரை முதலியவை சமைத்துப்
பயன்படுத்தப்பட்டால் அதில் உள்ள சத்துப் பொருள்கள் பெருமளவுக்கு அழிந்து விடுகிறன
என்பதைப் படித்திருக்கிறோம் !
அவித்தல், வறுத்தல், பொரித்தல், வதக்கல் போன்ற சமையல்
செயல்பாடுகளின் போது இவற்றில் உள்ள உயிர்ச்சத்துக்கள் (Vitamins) பெருமளவு அழிந்து
போகின்றன. இறுதியில் உயிச்சத்துக்களை இழந்துவிட்டு, சத்துக் குறைந்த வெறும் சக்கைகளைத்தான் நாம் உண்கிறோம் !
”உண்” என்ற வினைச் சொல்லின் அடிப்படையில் பல சொற்கள் உருவாகிப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம் !
1. உண் - உண்டி = உணவு
2. உண் - உணா = உணவு
3. உண் - ஊண் = உணவு
4 .உண் - உணி = உணவு
5. உண் - [ உணி ]- உணவு
உண்டி”கொடுத்தோர்உயிர்கொடுத்தோரே
என்னும் முதுமொழியைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதில் வரும் “உண்டி” என்பது ”உணவைக்” குறிக்கும் சொல் !
கட்டுச்சோறு என்பதைக் ”கட்டுணா” என்பது முன்னோர் வழக்கு.
இதற்கு “ஆற்றுணா” என்ற இன்னொரு
பெயருமுண்டு. இதில் வரும் “உணா” என்னும் சொல்லும் ”உணவைக்” குறிப்பதே !
“ பழியஞ்சிப் பாத்து ஊண்
உடைத்தாயின்...”
என்பது வள்ளுவர் வாக்கு.
இதில் வரும் “ஊண்” என்ற சொல்லும் ”உணவு” என்பதைக் குறிக்கும்
சொல்லே !
“உணி” என்றால் என்ன ? உண்ணப் பெறுவது எல்லாமே “உணி” தான் என்கிறது தமிழகராதி.
உண்ணப் பெறுவதற்கு “உணவு” என்று தானே பெயர். அப்படி உண்ணப்பெறும் உணவும் சத்து மிகுந்ததாக
இருப்பின் அதன் பெயர் சத்துணி. (சத்து + உணி = சத்துணி) எனப்படும். அதென்ன சத்துணி
?
நாம் இட்லி, தோசைக்குத் தொட்டுக்
கொள்கிறோமே,
அந்த சட்னியில் பல வகைகள்
உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும் !
தேங்காய்ச் சட்னி , தக்காளிச் சட்னி, கொத்துமல்லிச் சட்னி, புதினாச் சட்னி, இன்னும் சிலவும் உண்டு.
சரி !
தேங்காய்ச் சட்னியில்
என்னென்ன சேர்க்கப் படுகின்றன ? துருவிய தேங்காய், பொட்டுக் கடலை, பச்சை மிளகாய் ,சிறிது புளி, இஞ்சி, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை. கொஞ்சம் உப்பு !
இவற்றுள் பொட்டுக்கடலை
வறுபட்டதாயினும் சத்து மிகுந்தது, குழந்தை உணவாகப் பயன்படுவது. மற்றவை எல்லாம் பச்சையானவை – அதாவது - வெப்பம் காணாதவை!
நாம் சமைக்கும் உணவு
வகைகளில் வெப்பம் காணாத ஒன்றேயொன்று சட்னிதான். வெப்பப் படுத்தலுக்கு உட்படாத எந்த
உணவும் சத்து மிகுந்தது என்பது நமக்குத் தெரியும் !
எனவே, அவித்தல், வறுத்தல், பொரித்தல், வதக்கல், துவட்டல் போன்ற எந்தவிதமான சமையல்
கூறுகளுக்கும் உட்படுத்தப் படாத “சட்னி” தான் நாம் உண்பதிலேயே சத்து மிக்க உணவு ஆகும் !
சத்து + உணி (உணவு) =
சத்துணி என்பது காலப்போக்கில் உருமாறி இன்று “சட்னி” ஆகிவிட்டது. சட்னி என்பது எந்த மொழிச் சொல் என்பதில் பலருக்கு
ஐயப்பாடு உண்டு. இப்போது புரிகிறதா ? சட்னி என்பது தமிழ்ச்சொல்லே !
எழுத்து வடிவில்
வரும்போது மட்டுமாவது “சத்துணி” என்று எழுதுங்களேன் !!
”இட்லி” என்பது “இட்டளி” என்பதன் சிதைந்த வடிவம்.
இடு + அவி -
இட்டு + அவி = இட்டவி - இட்டளி - இட்லி.
========================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 02]
{17-12-2021}
=======================================================
சத்துணி = CHUTNEY. |