சிமிழி = CHUCK.
------------------------------------------------------------------------------------------------
ஒரு வேடன் காட்டுக்குச்
செல்கிறான். பறவைகளைப் பிடிக்கும் சிறுபொறியைக் கையில் வைத்திருக்கிறான். பறவைகள்
மிகுதியாகத் தென்படும் ஒரு இடத்தில் அதை நிறுவிவிட்டுப் புதர் மறைவில்
காத்திருக்கிறான் !
பறவைகள் வருகின்றன:
பொறியில் சில மாட்டிக்கொள்கின்றன. சிக்கிய பறவைகளுடன் வீடு திரும்புகிறான் !
கூடாவொழுக்கம் என்னும்
அதிகாரத்தில் திருவள்ளுவர் இந்த நிகழ்வை எடுத்தியம்புகிறார். எப்படி ? தவக் கோலத்தில் மறைந்து
கொண்டு தவமல்லாத தீய செயல்களைச் சில பெரிய மனிதர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்
!
அவர்களது செயல், புதரில் மறைந்துகொண்டு, வேடன் பறவைகளைப்
பொறிவைத்துப் பிடிப்பதற்கு ஒப்பாக இருக்கிறது என இரண்டையும் ஒப்பிட்டுக்
காட்டுகிறார் திருவள்ளுவர் !
----------------------------------------------------------------------------------
தவமறைந்து அல்லவை செய்தல்
புதல்மறைந்து
வேட்டுவன்
புள்சிமிழ்த்(து) அற்று. (குறள் 274)
----------------------------------------------------------------------------------
”புள் சிமிழ்த்தல்” என்றால் பறவையைப் ”பிடித்தல்” என்று பொருள். “சிமிழ்த்தல்” என்ற சொல்லுக்கு ”கட்டுதல்” “பொறியில் பிடித்தல்” எனப் பொருளுரைக்கிறது
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான “கழகத் தமிழ் அகராதி” !
சுருங்கச் சொன்னால் “சிமிழ்த்தல்” என்பதற்கு “பிடித்தல்” “பிடித்துக் கொள்ளுதல்” “இறுகப்பற்றிக் கொள்ளுதல்” என்று பொருள் !
பொறியியல் பணிமனைகளில்
இருப்புப் பட்டை போன்றவற்றில் துளை இடுவதற்குக் “குயிலி”யைப் (DRILL BIT) பயன்படுத்துகிறார்கள் !
”குயிலி”யை, “சக்” (CHUCK) என்னும் பிடி கருவியில்
நுழைத்து, இறுக்கி, அதன்பின்னர் “குயிற் பொறி”யில் ( DRILLING MACHINE) பொருத்தித்தான் துளையிட
முடியும். இந்தப் பிடி கருவிக்கு “டிரில் சக்” ( DRILL CHUCK ) என்று பெயர!
கடைசற் பொறியிலும் ( LATHE ) பிடி கருவிகள் உண்டு.
அவற்றில் THREE
JAW CHUCK, FOUR JAW CHUCK, DOG CHUCK எனச் சில வகைகள் உள்ளன. இந்த “சக்”குகள் எல்லாம் என்ன
செய்கின்றன !
கருவிகளையோ, மாழைத் துண்டுகளையோ (METAL PIECES) அல்லது வேறு பொருள்களையோ இறுக்கிப் பிடித்துக் கொள்ள வே அவை பயன்படுகின்றன !
இறுகப் பிடிப்பதை, “சிமிழ்த்தல்” என்னும் சொல் குறிப்பதாக
முன் பத்திகளில் பார்த்தோம். இறுகப் பிடித்துக் கொள்ளும் இந்த “சக்”குகளை, “சிமிழி” என்று சொல்லுதல்
பொருத்தமாக இருக்குமல்லவா ?
ஆகையால், “ சக்” (CHUCK) என்னும் இந்தக் கருவியை
இனிமேல்” சிமிழி “ என்றே சொல்வோம். ” சிமிழி” என்ற சொல்லின்
அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !
===================================================
CHUCK........................................= சிமிழி
DRILL
CHUCK............................= குயிலிச் சிமிழி
THREE JAW
CHUCK................= முத்தாடைச் சிமிழி
SELF CENTERING
CHUCK......= பொது மையச் சிமிழி
FOUR JAW
CHUCK..................= நாற்றாடைச் சிமிழி
MAGNETIC
CHUCK...................= கவரிச் சிமிழி
TRUE
CHUCK............................= பொது மையச் சிமிழி
===================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 02]
{17-12-2021}
======================================================
சிமிழி = CHUCK. |