ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (23) சிமிழி = CHUCK.

 

சிமிழி = CHUCK.

------------------------------------------------------------------------------------------------

 

ஒரு வேடன் காட்டுக்குச் செல்கிறான். பறவைகளைப் பிடிக்கும் சிறுபொறியைக் கையில் வைத்திருக்கிறான். பறவைகள் மிகுதியாகத் தென்படும் ஒரு இடத்தில் அதை நிறுவிவிட்டுப் புதர் மறைவில் காத்திருக்கிறான் !

 

றவைகள் வருகின்றன: பொறியில் சில மாட்டிக்கொள்கின்றன. சிக்கிய பறவைகளுடன் வீடு திரும்புகிறான் !

 

கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் இந்த நிகழ்வை எடுத்தியம்புகிறார். எப்படி ? தவக் கோலத்தில் மறைந்து கொண்டு தவமல்லாத தீய செயல்களைச் சில பெரிய மனிதர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் !


 

அவர்களது செயல், புதரில் மறைந்துகொண்டு, வேடன் பறவைகளைப் பொறிவைத்துப் பிடிப்பதற்கு ஒப்பாக இருக்கிறது என இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார் திருவள்ளுவர் !

 

----------------------------------------------------------------------------------

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த்(து) அற்று. (குறள் 274)

----------------------------------------------------------------------------------

 

புள் சிமிழ்த்தல் என்றால் பறவையைப் பிடித்தல்என்று பொருள். சிமிழ்த்தல்என்ற சொல்லுக்கு கட்டுதல்” “பொறியில் பிடித்தல்எனப் பொருளுரைக்கிறது திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான கழகத் தமிழ் அகராதி” !

 

சுருங்கச் சொன்னால் சிமிழ்த்தல்என்பதற்கு பிடித்தல்” “பிடித்துக் கொள்ளுதல்” “இறுகப்பற்றிக் கொள்ளுதல்என்று பொருள் !

 

பொறியியல் பணிமனைகளில் இருப்புப் பட்டை போன்றவற்றில் துளை இடுவதற்குக் குயிலியைப் (DRILL BIT) பயன்படுத்துகிறார்கள் !

 

குயிலியை, சக்” (CHUCK) என்னும் பிடி கருவியில் நுழைத்து, இறுக்கி, அதன்பின்னர் குயிற் பொறியில் ( DRILLING MACHINE) பொருத்தித்தான் துளையிட முடியும். இந்தப் பிடி கருவிக்கு டிரில் சக்” ( DRILL CHUCK ) என்று பெயர!

 

கடைசற் பொறியிலும் ( LATHE ) பிடி கருவிகள் உண்டு. அவற்றில் THREE JAW CHUCK, FOUR JAW CHUCK, DOG CHUCK எனச் சில வகைகள் உள்ளன. இந்த சக்குகள் எல்லாம் என்ன செய்கின்றன !

 

கருவிகளையோ, மாழைத் துண்டுகளையோ  (METAL PIECES) அல்லது வேறு பொருள்களையோ இறுக்கிப் பிடித்துக் கொள்ள வே அவை பயன்படுகின்றன !

 

இறுகப் பிடிப்பதை, “சிமிழ்த்தல்என்னும் சொல் குறிப்பதாக முன் பத்திகளில் பார்த்தோம். இறுகப் பிடித்துக் கொள்ளும் இந்த சக்குகளை, “சிமிழிஎன்று சொல்லுதல் பொருத்தமாக இருக்குமல்லவா ?

 

ஆகையால், சக்” (CHUCK) என்னும் இந்தக் கருவியை இனிமேல்சிமிழி என்றே சொல்வோம். சிமிழிஎன்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !

 

===================================================

 

CHUCK........................................= சிமிழி

DRILL CHUCK............................= குயிலிச் சிமிழி

THREE JAW CHUCK................= முத்தாடைச் சிமிழி

SELF CENTERING CHUCK......= பொது மையச் சிமிழி

FOUR JAW CHUCK..................= நாற்றாடைச் சிமிழி

MAGNETIC CHUCK...................= கவரிச் சிமிழி

TRUE CHUCK............................= பொது மையச் சிமிழி

 

 

===================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 02]

{17-12-2021}

======================================================

சிமிழி = CHUCK.