ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (29) அளகை = BANK.

 

அளகை = BANK 

-------------------------------------------------------------------------------------------------

வங்கிக் கணக்கு இல்லாத மனிதனை, இப்போது காண்பது அரிது. நடுவணரசின் சில திட்டங்களால் வங்கிக் கணக்கு எண்ணிக்கையும் வங்கிகளின் செயல்பாடும் மிகுந்து விட்டன.

 

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள், தனியார் வங்கிகள், நாட்டுடைமை வங்கிகள், அயல் நாட்டு வங்கிகள் என வங்கிகளின் வகையும் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிவிட்டன. 

 

பேங்க் என்ற ஆங்கிலச் சொல் தமிழில் எவ்வாறெல்லாம் மொழி பெயர்க்கப் பட்டது தெரியுமா ? முதலில் ”BANK ” என்பதை பேங்க்என்றனர். 

 


பின்பு அது பாங்குஆயிற்று. இப்போது வங்கிஎன வழங்கப்படுகிறது .(வங்கி என்றால் கோணல் என்று பொருள்) 

 

இவை எதுவுமே பேங்க்என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் அன்று. மூளை முடக்கம் பெற்றவர்களின் மொழி பெயர்ப்பு இவை !

 

வங்கியின் பணிகள் யாவை ? சுருங்கச் சொன்னால், பணத்தைப் பெறுதல், தருதல், அவ்வளவே ! 

 

ஆதாயம் ஈட்டும் எண்ணத்துடன் இது ஒரு தொழிலாகச் செய்யப் படுகிறது. எனவே இது ஒரு வணிகம் தான்! என்ன வகையான வணிகம்? பண வணிகம் !

 

பணவணிகம் என்ற அடிப்படையில், வங்கியின் பணிகள் விரிவு அடைகின்றன !  ”நகைக் கடன்”, “வீட்டு அடைமானக் கடன்” ,”நில அடைமானக் கடன்” - இப்படி நிறைய உள்ளன ! 

 

கடனுக்கு ஆதாயமாக வட்டி பெறுவதனால், வங்கி ஒரு வணிக நிறுவனம்ஆகிறது. சேவை நிறுவனம்அல்ல !

 

தமிழகத்தில் ஒரு காலத்தில் பணவணிகம்செய்வதில் செட்டியார்கள்முன்னணியில் இருந்தனர். 

 

இவர்களுக்கு அளகையர்என்று பெயர். அளகையர்என்றால், ”செட்டியார்”, ”பணவணிகர்என்று பொருள் உரைக்கிறது கழகத் தமிழ் அகராதி”.

 

முன்பு செட்டியார்கள் செய்து வந்த பண வணிகத் தொழிலைத்தானே இப்போது வங்கிகள் செய்து வருகின்றன. அப்படி இருக்கையில் வங்கியை அளகைஎன்று சொல்வது பொருத்தம் தானே !

 

வேறொரு செய்தியையும் இந்த இடத்தில் இணைத்துப் பாருங்கள்.நிதிக் கடவுளான குபேரனின் தலை நகரின் பெயர் அளகைஎனப்படும் அளகாபுரி ! 

 

நிதி புழங்கும் இடமான வங்கிக்கு நாம் சூட்டும் பெயரும் அளகை” !. என்ன பொருத்தம் பாருங்கள் !

 

எனவே நாம் இனிமேல் வங்கிஎன்னும் பொருத்தமற்ற சொல்லைத் துறப்போம் ! 

 

பொருள் ஆழமும், சுருங்கிய வடிவும், ஒலி நயமும் உடைய அளகைஎன்னும் சொல்லைப் புழக்கத்தில் கொண்டு வருவோம் ! 

 

அளகை என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !

 

========================================================


BANK.....................................  = அளகை

CO-OPERATIVE BANK...........= கூட்டுறவு அளகை
CO-OP CENTRAL BANK....... =
கூட்டுறவு மைய அளகை
STATE BANK OF INDIA......... =
இந்திய நாட்டு அளகை
INDIAN BANK........................ .=
இந்திய மக்கள் அளகை
INDIAN OVERSEAS BANK.....=
அயலக இந்தியர் அளகை
BANK DRAFT......................... =
அளகை வரைவு
SAVINGS BANK ACCOUNT... =
அளகைச் சேமக் கணக்கு
BANK COMMISSION...............=
அளகைத் தரகு
BANK LOAN............................ =
அளகைக்கடன்
BANK DUTY............................ =
அளகைப் பணி



=========================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 02]

{17-12-2021} 

===================================================

 அளகை  = BANK.