-------------------------------------------------------------------------------------
தமிழில் ஒவ்வொரு சொல்லும்
ஏதாவது ஒரு வேர்ச் சொல்லில் இருந்து தான் உருவாகிறது. வேர்ச் சொல் என்பது வித்துப்
போன்றது.
வித்தில் இருந்து முளைவிட்டு, நீண்டு, வளர்ந்து, பரந்து, விரிந்து , தழைத்து செடிகளும் மரமும்
உருவாவதைப் போல,
வேர்ச் சொல்லில் இருந்து பல
வடிவங்களில் புதுச் சொற்கள் உருவாகின்றன.
“அம்”, “அர்”, “இல்”, “இள்’, “உல்”, “உள்’, “ஒல்”,”கல்”, “குல்”, என்பது போன்ற வேர்ச் சொற்கள்
தமிழில் பல உள்ளன. அவற்றுள் “சுல்” என்பதும் ஒன்று.
'சுல்” என்னும் வேர்ச் சொல் வளைதற் கருத்தை உணர்த்தும். வளைதல் என்பது சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை முதலிய பல கருத்தைத் தழுவும். (ஆதாரம் : தேவநேயப் பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகள் )
சுல் > சுலவு > சுலவுதல் = சுற்றுதல்
சுல் > சுலாவு > சுலாவுதல் = சூழ்தல்
சுல் > சில் > சில்லு > வட்டமான துண்டு
சுல் > சில் > சிலை = வளைந்த வடிவமுள்ள
வில்
சுல் > சில் > சிலை = வளைவு நெளிவான கற்
சிலை
சுல் > சில் > சிலை > சிலம்பு = வட்டமான கால் அணி.
சுல் > சில் > சிலை >சிலந்தி = வட்டமான நூல் வலை
............................................................அமைக்கும் பூச்சி.
சுல் > சில் > சிலை > சிலம்பம் = வட்டமாகச்
சுழற்றி
...........................................................ஆடப்படும் குச்சி
விளையாட்டு.
பணி மனைகளில் (Engineering Work shops) அல்லது ஊர்திச் சீரகங்களில் (Automobile Work Shops) ஸ்பானர் என்னும் கருவியைப் பார்த்திருப்பீர்கள்.
ஊன்றாணியின் ( Bolt ) தலைப் பகுதியை அல்லது சுரையின் ( Nut ) வெளிச் சுற்றுப் பகுதியை இறுகக் கவ்விப் பிடிக்கச் செய்து வட்டமாகச் சுழற்றி இயக்கப் படுவதே ஸ்பானர் ஆகும்.
ஸ்பானர் வட்டமான திசையில் வலஞ்சுற்றாக (Clock-wise) இயக்கப் பட்டால் ஊன்றாணி முடுக்கப் பட்டு இறுக்கப்படும். இடஞ்சுற்றாக (Anti Clock-wise) இயக்கப் பட்டால் ஊன்றாணியின் இறுக்கம் தளர்ச்சி அடையும்.
ஸ்பானரின் இயக்கம் நேர்த் திசையிலோ, அல்லது எதிர்த் திசையிலோ வட்டமாக அமையும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
இவ்வாறு வட்டமாகச் சுழற்றி இயக்கப்படும் ஸ்பானரை “ சிலம்பு “ என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும் அல்லவா ? (சிலம்பு=வட்டமாக இயக்கப்படுவது)
” சிலம்பு “ என்னும் காலணி கண்ணகி காலத்துடன் மறைந்து விட்டது. காப்பியத்தில் தான் சிலம்பு உயிர் வாழ்கிறது. “ சிலம்பு “ என்னும் இந்த அழகிய சொல்லைப் புழக்கத்தில் விடுவோமே !
இன்னும் எத்துணைக் காலத்திற்குத் தான் நாம் “ ஸ்பானர் “ என்ற சொல்லை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது ?
“ ஸ்பானர் “ என்ற சொல்லைப் பரண் மீது வைத்திடுவோம் ! .” சிலம்பு “ என்ற சொல்லைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் ! தமிழின் பிள்ளைகளாகிய நாம் நமது அன்னை மொழிக்குப் புதுப் புதுச் சொற்கள் என்னும் அணிகலன்களைப் பூட்டி மகிழ்வோமே !
“ சிலம்பு “ என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் !
=================================================
|
|
SINGLE ENDED SPANNER |
= ஒரு முனைச் சிலம்பு |
DOUBLE ENDED SPANNER |
= இரு முனைச் சிலம்பு |
MULTI SPANNER |
= பன்முனைச் சிலம்பு |
ADJUSTABLE SPANNER |
= சீரமை சிலம்பு |
WRENCH SPANNER |
= திருகுச் சிலம்பு |
BOX SPANNER |
= குதைச் சிலம்பு |
RING SPANNER |
= பூண் சிலம்பு |
MONKEY SPANNER |
= கவிச் சிலம்பு |
SOCKET SPANNER |
= குழிச் சிலம்பு |
PEG SPANNER |
= முளைச் சிலம்பு |
ALLEN SPANNER |
= அளை சிலம்பு |
“ C “SPANNER |
= பிறைச் சிலம்பு |
===================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052 ; சிலை (மார்கழி) 02]
{17-12-2021}
===================================================
சிலம்பு = SPANNER. |