சேமச்செப்பு = THERMOS FLASK
----------------------------------------------------------------------------------------------
அழகிய சிற்றூர். தூய்மையாகப் பேணிவரப்படும்
நீண்ட தெரு. தெருவின் இரு மருங்கும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகள். கள்வர்கள் இல்லாமையால் அவ் வீடுகளுக்குக் காவல்
எதுவும் தேவையில்லை. ஆகையால் நாய்கள் வளர்க்கப்படுவதில்லை !
இல்லத் தலைவன் பொருள் ஈட்டி வர எண்ணி, வேற்று நாடு சென்றிருக்கிறான். அடுத்து வரும் வாடைக் காலம் தொடங்குகையில் திரும்பி வந்து விடுவதாகவும், அதுவரைத் தோழியின் துணையுடன் மனக் கவலைக்கு இடம் தராமல் வாழ்ந்து வருமாறும் தன் காதல் தலைவியிடம் அறிவுறுத்திச் சென்றிருக்கிறான் !
இத்தகைய சூழ்நிலையில், அத்தலைவன் இல்லத்தின் முன் இரந்துண்ணும் ஒருவர் கையில் பிச்சை ஏற்புக் கலனுடன் வந்து நிற்கிறார். தலைவி வாயிலுக்கு வருகிறாள் !
இல்லத்தில் தலைவன் இல்லாதபோது இரவலர்க்குப் பிச்சை இடலாகாது என்பது அக்கால மகளிர் பின்பற்றி வந்த வழக்கம். கேட்பவர்க்கு “இல்லை” எனலாகாது என்பதும் அக்காலத்திய பண்பாடு. தலைவன் வேற்றூர் சென்றிருப்பதால் பிச்சை இடவும் மனமில்லை !
என்னசெய்வது என்று அறியாமல் ஒரு நொடி திகைத்த தலைவி, இரவலரிடம் வினவினாள், “ஐயனே ! பொருள் ஈட்டிவர வேற்று நாடு சென்றிருக்கும் என் தலைவன் வாடைக்காலத் தொடக்கத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். வாடைக்காலம் எப்போது வரும் ? ”
”தாயே ! இன்னும் இரு திங்களில் வாடைக்காலம் வந்து விடும். தலைவன் நலமுடன் திரும்பிவருவான். கவல் கொள்ளாதே ! வாழ்வாங்கு வாழ்வாய் ! “ என்று வாழ்த்தினார்!
“ஐயனே ! தூய்மையான இத் தெருவில் காவலுக்கு நாய் இல்லாத அகன்ற நடை வாசலுடைய அதோ அந்த வீட்டில் நல்ல சம்பா அரிசிச் சோறும் எருமையின் வெண்ணிற வெண்ணெயும் ஒரு வீட்டுப் பிச்சையாகவே கிடைத்து, ஆற அமர அங்கேயே இருந்து உண்டு, குடிப்பதற்காக முன்பனிக் காலத்திற்கு இதமான வெந்நீரும் தங்கள் செப்புக் குவளையில் பெறுவீராக ” என உளமாற வாழ்த்துகிறாள் !
சங்க இலக்கியமான குறுந்தொகையில் 277 – ஆவது பாடலாக வரும் இச் செய்யுளைப் பார்ப்போமா !
-----------------------------------------------------------------------------------------------
குறுந்தொகைச் செய்யுள். 277.
-----------------------------------------------------------------------------------------------
ஆசு இல் தெருவில் நாய்
இல் வியன் கடைச்
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே--
”மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக்கால் வருவது ?” என்றி;
அக்கால் வருவர், எம் காதலோரே.
------------------------------------------------------------------------------------------------
அடிநேருரை:
----------------------
ஆசு இல் தெருவில் நாய் இல்
வியன் கடை – தூய்மையான தெருவில் நாய்
இல்லாத அகன்ற நடைவாயிலுள்ள வீட்டில்;
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது – சிவப்புச் சம்பா அரிசிச் சோறும் வெண்மை கலந்த கரிய நிற எருமையின் வெண்ணெயும்
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – ஒரு வீட்டுப் பிச்சையாகவே கிடைத்து, அங்கேயே ஆற அமர உண்டு முடித்து;
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் – பனிக்காலத்திற்கு இதமாகக் குடிப்பதற்கான வெந்நீரினை;
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே – உங்கள் செப்புக் குவளையில் சேமிக்கவும் பெறுவீராக !
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை – இடையிடையே மின்னல் வெட்டி, நடுக்கம் தரும் குளிர்ந்த மழை பெய்கின்ற வாடைக்காலம்;
எக்கால் வருவது என்றி – எப்போது வருமெனச் சொல்லுங்கள்.
அக்கால் வருவர் எம் காதலோரே – அப்போது இந்த வீட்டின் தலைமகனான எம் காதலரும் வருவார்.
------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள் :
----------------------------------
ஆசு – குற்றம்; வியன்கடை – அகன்ற வாயில்; அமலை - சோற்றுத் திரள் ; வெண் மை – வெண்மை கலந்த கரிய நிறமுள்ள
எருமை; வெள் இழுது – வெண்ணெய்; அற்சிரம் – முன்பனிக்காலம் ; வெய்ய –விரும்பத்தக்க, இதமான; சேமச் செப்பு – மூடியுள்ள செம்புக் குவளை, பெறீஇயர் – பெறுவீராக !
-------------------------------------------------------------------------------------------------
இந்தச் செய்யுளில் ஐந்தாவது
அடியில் “சேமச் செப்பு” என்று ஒரு சொல் வருகிறது
அல்லவா ? சேமச் செப்பு என்றால்
காப்புத் திறன் உடைய செப்பு என்று பொருள். அஃதாவது அச் செப்பில் இட்டு
வைக்கப்படும் வெந்நீரானது தன் வெப்பத்தை இழக்காமல் நெடுநேரம் வைத்திருக்கும் என்று பொருள். இரட்டைச் சுவர் உள்ள (DOUBLE WALL) செப்பு போலும் ! இக்காலத்தில் நாம் “தெர்மாஸ் பிளாஸ்க்” என்று சொல்கிறோமே, அதற்கு இணையான பண்புகள் உடைய
செப்பு போலும் !
“தெர்மாஸ் பிளாஸ்க்” என்பதை நாம் இப்போது வெப்பக் குடுவை என்கிறோம். இச்சொல்லுக்கு மாற்றாக “சேமச் செப்பு” என்று நாம் இனி சொல்வோமே !
----------------------------------------------------------------------------------------------
THERMOS FLASK = சேமச் செப்பு
-----------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 04]
(19-12-2021)
-----------------------------------------------------------------------------------------------
சேமச் செப்பு = THERMOS FLASK. |