வட்டா - TOWERA .
தும்பா - TUMBLER.
---------------------------------------------------------------------------------------------
எனக்கு அகவை 16 அல்லது 17 இருக்கும். பள்ளி இறுதி
வகுப்புப் படிப்பை முடித்துவிட்டு மாமாவின் பலசரக்குக் கடையில் ஈராண்டுகள்
உதவிக்கு இருந்தேன். கடைக்குப் பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை !
காலையில் எழுந்ததும் வேளாண்
கூலித் தொழிலாளர்கள் தேநீர் அருந்த அங்கு வருவார்கள். ”ஐயா ஒரு சாயம் போடுங்கள்” ! அதாவது பால் கலவாத தேநீர்! “சாயம்” என்பது வண்ண நீர் அல்லது கலவை தானே ! தமிழில் புழக்கத்தில் உள்ள “சாயம்” இந்தியில் “சாயா” ஆகிவிட்டது !
இப்படித்தான் பல சொற்களைப் பிறமொழிகளுக்கு விட்டுக்கொடுத்து விட்டு இப்போது அவையெல்லாம் பிறமொழிச் சொற்கள் என்று ஒதுக்கிக் கொண்டிருக்கிறோம்! எனக்கு அப்போதெல்லாம் மொழியாய்வு செய்யும் சிந்தனை இருந்ததில்லை !
தேநீர்க் கடைக்காரர்
வினவுகிறார்,
“கிளாசில்
(GLASS) போடவா” ? “வேணாங்க ! வட்டா செட்டில் போடுங்கள்” அதாவது இப்போது சொல்கிறோமே ”டவரா” அதுதான் “வட்டா”. டவரா & டம்ளர் தான் வட்டா செட் !
அரசுப் பணிக்கு வந்த பிறகு சொல்லாராய்ச்சியில் மனம் முனைப்பாக ஈடுபட்டிருந்த போது ”வட்டா” என்ற சொல்லைப் பற்றி ஆய்வு
செய்யத் தொடங்கினேன் !
கழகத் தமிழ் அகரமுதலியைப்
புரட்டிப் பார்த்தேன். அதில் “வட்டகை” என்னும் சொல்லுக்கு, பிற பொருள்களுடன் “சிறு கிண்ணம்”, எனப் பொருள் சொல்லப்பட்டிருந்தது ! ”வட்டகை” என்பதிலிருந்து திரிந்த “வட்டா” என்னும் சொல்லுக்கு, “தட்டம்”, “தாம்பாளம்” என்றும் “வட்டில்” என்னும் சொல்லுக்கு “உண்கலம்”, “கிண்ணம்” என்றும் பொருள்
தரப்பட்டிருக்கிறது !
“டவரா + டம்ளர்” என்பதில் “டவரா” என்பது வட்டமாக உள்ள ஒரு
குடிகலன் தானே ! அக்காலத்தில் தேநீர் (TEA) அல்லது குளம்பி (COFFEE) டவரா + டம்ளரில் தான் தருவது
வழக்கம். இப்போது கோப்பை + குடிதட்டு (CUP
& SAUCER) புழக்கத்தில் வந்துவிட்டது !
“டவரா” என்னும் சொல்லை எருதந்துறை
அகரமுதலியில் (OXFORD DICTIONARY) தேடினேன்; கிடைக்கவில்லை; உருது, அரபி அல்லது ஆங்கிலம் அல்லாத பிறமொழிச் சொல் போலும் ! “டவரா” என்பதைத் தான் சீறூர்களில் (கிராமங்களில்) “வட்டா” என்று சொல்கிறார்கள் !
[சிறுமை + ஊர் = சிற்றூர் (அ) சீறூர். “பருவ வானத்துப் பா மழை கடுப்ப, கரு வை வேய்ந்த கவின் குடிச் சீறூர்” என்பது பெரும்பாணாற்றுப்படை வரிகள் 190, 191. சீறூர் = VILLAGE = கிராமம். கிராமம் என்பது தமிழ்ச் சொல் அன்று !
திருமண அரங்கங்களில் சமையற்கூடம் பக்கம் போய் இருக்கிறீர்களா ? கூட்டு, கறி ஆகியவற்றைச் செய்வதற்கு அடிப்பக்கம் தட்டையாகவும், வடிவத்தில் வட்டமாகவும் இருக்கும் பெரிய கலன்களைச் சமையற் கலைஞர்கள் பயன்படுத்துவார்கள். இந்தக் கலன்களை அவர்கள் “வட்டா” என்று சொல்வதைக் காணலாம். இந்த வட்டாவின் சிற்றுரு (MINIATURE SIZE) தான் நாம் குளம்பி அல்லது தேநீர் அருந்துவதற்கு வீடுகளில் பயன்படுத்தும் “டவரா” !
சீறூர்களில், தந்தை தன் மகளிடம் “வட்டாவையில் கொஞ்சம் எண்ணெய்
கொண்டு வா !” என்று சொல்வதைக்
கேட்டிருக்கலாம். இங்கு சிறு கிண்ணம் என்னும் பொருளில் ”வட்டகை” (வட்டாவை) என்னும் சொல்
எடுத்தாளப் படுகிறது !
”வட்டா” என்பதன் முன் வடிவம் “வட்டகை”. வட்டகையில் இருந்து திரிந்த
சொல் தான் “வட்டா”. இனி நாம் “டவரா” என்று சொல்வதை விடுத்து “வட்டா” என்று சொல்லிப் பழகுவோமே !
அடுத்து “டம்ளர்” என்னும் சொல்லைப் பார்ப்போம்
! “டம்ளர்” என்பது ஒரு குடிகலன் ! தமிழில் “துல்” என்னும் வேர் வளைதற் கருத்தை
உணர்த்துவது. துல் – துள் - துண்பு - தும்பு = உட்டுளை, துளையுள்ள உறுப்பு, உறிஞ்சி !
துல் - துள் - துண்பு - தும்பு - தும்பா = (1) குடிகல வகை (2) குடுக்கைக் கலம் (3) உட்டுளையுள்ள சுரைக்
குடுக்கை (பக்.281.பாவாணரின் வேர்ச் சொற்
கட்டுரைகள்).
தும்பா = குடிகல வகை ! ”தும்பா” என்னும் தமிழ்ச் சொல் தான்
ஆங்கிலத்தில் ”டம்(ப்)ளர்” (TUMBLER) ஆகியிருக்கிறது. தும்பாவை
மறந்து விட்டு நாம் “டம்ளர்” என்பதைப் பிடித்துக் கொண்டோம் ! எனவே இனி “டம்ளர்” என்று சொல்லாமல் “தும்பா” என்று சொல்லிப் பழகுவோமே !
நண்பர்கள் வீட்டிற்குச்
செல்கையில் “ஒரு ”டம்ளர்” தண்ணீர் கொண்டு வாருங்கள் “ என்று கேளாமல் ஒரு ”தும்பா” தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று கேட்போம் !
பொதுவாக, தமிழர்கள் ஆங்கிலத்தில்
எதைச் சொன்னாலும் மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள். தமிழில் கட்டுமரம் என்பதை
ஆங்கிலத்தில் CATAMARAN என்கிறார்கள். தமிழ்ச்
சொல்லின் பலுக்கல்படி KATTUMARAM என்று தானே சொல்ல வேண்டும். CATAMARAN என்பது சரியன்று என்று
எந்தத் தமிழரும் வாதிடுவதில்லை !
புகை பிடிக்கப் பயன்படும் “சுருட்டு” ஆங்கிலத்தில் “CHEROOT" ஆகியிருக்கிறது. “SURUTTU" என்று சொல்லாமல் “CHEROOT" என்று ஏன் சொல்கிறாய் என்று எந்தத் தமிழனும் ஆங்கிலேயர்களைப் பார்த்துக் கேட்பதில்லை !
ஆனால் தமிழில் புதிதாக எந்தவொரு சொல்லை அறிமுகப் படுத்தினாலும் அதை ஏற்காமல் ஆயிரம் குறை சொல்லுவார்கள். குறை சொல்கிறார்களே என்பதற்காக நாம் புதிய சொற்களை அறிமுகப் படுத்தாவிட்டால் தமிழில் சொல் வளம் எப்படிப் பெருகும் ? இன்னும் எத்துணைக் காலத்திற்கு “டவரா”, “டம்ளர்” என்றே சொல்லிக்கொண்டிருப்பது ?
நறுமணத்துடன் குளம்பி (COFFEE) அருந்துவது போல் புது மெருகுடன் தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் !
=========================================================
TOWERA..........................= வட்டா
TUMBLER.........................= தும்பா
TOWERA + TUMBLER....= வட்டா + தும்பா
TOWERA SET...................= வட்டாக் கணம்
GLASS TUMBLER...........= கண்ணாடித் தும்பா
PLASTIC TUMBLER........= ஞெகிழித் தும்பா
SILVER TUMBER.............= வெள்ளித் தும்பா
======================================================
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”புதிய சொல்லாக்கம்” வலைப்பூ
தி.பி: 2052, சிலை (மார்கழி),05]
{20-12-2021}
=======================================================
வட்டா = TOWERA |