காலிகை = CALENDAR
------------------------------------------------------------------------------------------------
எந்தவொரு நிகழ்வையும் நினைவில் வைத்துக் கொள்ள நமக்குத் தேவை அஃது எப்பொழுது நிகழ்ந்தது என்பதை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடு ! இந்தியா எப்பொழுது விடுதலை பெற்றது ? இதை நமக்கு நினைவுபடுத்துவது 1947 என்னும் ஆண்டுக் குறியீடு !
எந்த மாதத்தில் விடுதலை பெற்றது ? இதை அடையாளப் படுத்துவது ஆகத்து என்னும் மாதக் குறியீடு ! எந்த நாளில் விடுதலை பெற்றது என்பதை அடையாளப் படுத்துவது 15 என்னும் நாள் குறியீடு !
நான் எப்பொழுது வீட்டிலிருந்து அலுவலகம் புறப்பட்டேன் ? இதற்கு விடை சொல்வது “காலை” என்னும் வேளைக் குறியீடு ! அலுவலகம் எப்பொழுது இயங்கத் தொடங்குகிறது ? இதற்கு விடையளிப்பது “மணி” என்னும் சிறுகால் (சிறிய காலப் பகுதி) குறியீடு!
இத்தகைய குறியீடுகள் தான் மனிதனின் நினைவுகளைக் குழப்பத்திலிருந்து மீட்கின்றன ! இந்தக் குறியீடுகளை எழுத்து வடிவில் வைத்துக்கொண்டால் அவை நிலைத்து நிற்கும் என்பதை அறிந்த மனிதன், அதற்கு வாய்ப்பாக வடிவமைத்துக் கொண்டது தான் “காலண்டர்” (CALENDAR) !
நடைமுறையில் உள்ள “காலண்டர்”கள் இரண்டு வகைப்படும். அவை (01) அன்றாடம் நாளையும் கிழமையையும் காட்டும் “நாள்காட்டி” என்னும் “DAILY SHEET". (02) மாதப் பெயரையும், அம்மாதத்தில் உள்ள நாள்களையும், அந்த நாள்களுக்கு உரிய கிழமைகளையும் காட்டும் “மாதங்காட்டி” என்னும் “மதிகாட்டி” “MONTHLY SHEET" ! (மதி என்பதற்குப் பிற பொருள்களுடன் ”மாதம்” என்னும் பொருளும் உண்டு !
”காலண்டர்” என்பதை “நாள்காட்டி” என்னும் சொல்லால் அழைக்கிறோமே தவிர ”மதிகாட்டி” என்னும் சொல் இன்னும் வழக்கில் வரவில்லை. படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரது வாயிலும் புகுந்து புறப்படும் சொல் “காலண்டர்” !
ஆங்கிலேயர் அகன்றுவிட்டாலும், அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம் மட்டும்
இன்னும் அகலவில்லை. சரி ! காலண்டர் என்பதைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ?
”கால்” என்பதற்குத் தமிழில் பிற பொருள்களுடன் “காலம்” என்னும் பொருளும் உண்டு. “காலண்டர்” என்பது காலம் உரைக்கும் ஒரு கருவியல்லவா ? “இகை” என்றால் “கொடு” என்று பொருள். காலத்தை அல்லது காலத்தின் உட்கூறுகளை நமக்குச் செய்தியாகக் கொடுக்கும் கருவியை “கால் + இகை = காலிகை” என்று கூறுதல் தவறில்லையே !
நாம் பார்க்கும் அந்த நொடியில் அற்றை நாள் (அன்றைய நாளில்) அல்லது பிற்றை நாள் (பின்னொரு நாளில்) நிலவும் நாண்மீன் (நட்சத்திரம்), பிறை நிலை, கதிர்மதி நிலை (திதி), கிழமை, மாதம் முதலிய காலப் பகுதிகளைச் செய்தியாக நமக்குக் கொடுக்கும் கருவி என்பதால் இதைக் “காலிகை” என்று அழைத்தல் பொருத்தமானது !
உலகில் உள்ள ஒவ்வொரு பொருட்கும், மக்கள் உள்ளத்தில் எழும் ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு சொல் தோன்றுவது இன்றியமையாதது ஆகும். ஆயினும், ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு புதுச் சொல் அமைவது இயலாது. ஆதலல் பழஞ் சொற்களினின்றே புதுச் சொற்கள் திரித்துக் கொள்ளல் வேண்டும். கருத்துகள் பல்கப் பல்கச் சொற்களும் பல்க வேண்டி இருப்பதால், ஒரு மொழி முழு வளர்ச்சி அடைவதற்குப் பல்லாயிரக் கணக்கான திரிசொற்கள் தேவையாயுள்ளன. (பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் நூல், பக்.90)
பாவாணரின் வழிகாட்டுதலுக்கு இணங்க “கால்” (காலம்) என்னும் சொல்லிலிருந்து “காலிகை” என்னும் புதிய சொல்லைத் திரித்து அதை ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் ”CALENDAR” என்னும் சொல்லுக்கு இணையான சொல்லாக அறிமுகப்படுத்துகிறேன் !
ஒரு புதிய சொல் உருவாக்கப்படும் போது, அதிலிருந்து பல கிளைச் சொற்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதாக அச்சொல் நெகிழ்ச்சித் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். "CALENDAR" என்பதற்கு இணையாக “நாட்காட்டி”யை இருத்திக் கொண்டால், CALENDAR YEAR என்பதை நாட்காட்டி ஆண்டு என்று சொல்ல வேண்டிவரும். இச்சொல் பொருத்தமானதாக இல்லை !
எனவே கிளைச் சொற்களை உருவாக்க எந்தவகையிலும் இடையூறு தராத “காலிகை” என்னும் சொல்லை நாம் புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் ! “காலிகை”யிலிருந்து உருவாகும் கிளைச் சொற்கள் அடியில் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பலுக்கிப் பாருங்கள் !
“காலிகை” என்னும் சொல் முற்றிலும் புதியது என்பதால் அதை ஏற்றுக் கொள்ளச் சிலருக்குத் தயக்கம் இருக்கும். தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும்; போகப் போகப் பழகிவிடும். முற்றிலும் புதிய சொல்லான “CORONA”வை நாம் தயக்கமின்றி ஏற்கவில்லையா ? சுனாமியை (TSUNAMI) ஏற்கவில்லையா ? “காலிகை”யை ஏற்பதிலும் அத்தகைய நெகிழ்ச்சித் தன்மையை நாம் காண்பிக்க வேண்டும் !
"காலிகை” என்னும் சொல் வடிவில் சிறியது; பொருளில் பொலிவுடையது; ஓசையில் இனியது ! எனவே “காலிகை”யை இனி நாம் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் !
------------------------------------------------------------------------------------------------
CALENDAR....................................= காலிகை
DAILY CALENDAR.......................= அற்றைக் காலிகை
DAILY SHEET................................= அற்றைக் காலிகை
MONTHLY CALENDAR...............= மாதக் காலிகை
MONTHLY SHEET.........................= மாதக் காலிகை
CALENDAR MONTH.....................= காலிகை மாதம்
CALENDAR YEAR.........................= காலிகை ஆண்டு
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
”புதிய சொல்லாக்கம்” வலைப்பூ,
[தி.பி.2052, சிலை (மார்கழி) 06]
{21-12-2021}
------------------------------------------------------------------------------------------------
காலிகை =CALENDAR |