பின்னீடு = REFILL
------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்ற
நண்பர்களில் எத்தனை பேர் கிராமப் புறங்களைச் சார்ந்தவர்கள் என்று எனக்குத்
தெரியாது.
ஆனால், இப்போது நகர்ப்புறங்களில்
வாழ்ந்தாலும் “நான் பிறந்து வளர்ந்தது
எல்லாம் கிராமத்தில் தான்” என்று சொல்லிக் கொள்ளும் வகையில் பெரும்பான்மையான நண்பர்கள்
இருக்கக் கூடும் என்று கருதுகிறேன்.
கிராமப் புறங்களில் தான், தமிழ் இன்னும்
உயிர்ப்புடன் இருக்கிறது.
கிராமத்தில் ஒரு கூரை
வீடு. வீட்டுத் திண்ணையில் ஒரு தாயும் மகளும் உரையாடுகிறார்கள். உரையாடலைப்
பேச்சுத் தமிழில் சொல்லாமல், எழுத்துத் தமிழில் தருகிறேன்.
”ஏனடி தாமரை ! அடுப்பில் இட்டலி ஊற்றி வைத்திருந்தேனே ! எடுத்துவிட்டாயா?”
“எடுத்துவிட்டேனம்மா !
ஆமாம் ! எத்தனை ஈடு ஊற்ற வேண்டும் ?”
”இரண்டு ஈடு ஊற்றினால்
போதும் ! அதற்குமேல் ஊற்றாதே !”
இந்த இடத்தில், நண்பர்களுக்கு ஒரு கேள்வி
! ”ஈடு“ என்றால் என்ன ?
“இடு” என்னும் சொல்லின் திரிபு
தான் “ஈடு”. இலக்கணத்தில் இதை நீட்டல்
விகாரம் என்று சொல்வார்கள்.
இட்டலித் தட்டில் மாவு
இட்டு, பானைக்குள் வைத்து, அடுப்பில் ஏற்றுகிறார்
தாய். இது முதலாவது “ஈடு”.முதல் என்றால் “முந்தி நிற்பது”, “முன்னணியில் நிற்பது”, “முதலாவதாக நிற்பது” என்று பொருள். [ஒப்பு
நோக்குக:- முதலமைச்சர், முதல் நாள்] எனவே முதல் ஈடு என்பது, முன்மை + ஈடு = முன்னீடு என்று அமையும்.
வேகவைத்து எடுத்த பின், இரண்டாவது முறையாக மாவைத்
தட்டில் இடுகிறாள் மகள். இது இரண்டாவது ”ஈடு”. வெந்த இட்டலிகளை எடுத்து விட்டு, அதற்குப் பின்னதாக இட்டலித் தட்டில் மீண்டும் மாவை இடுவதால், இரண்டாவது ஈடு என்பது
பின்னீடு [பின்மை + ஈடு + பின்னீடு]
நகரத்திற்கு வாருங்கள் !
காப்புக் குடுவைக்குள் [THERMOS FLASK] இருக்கும் கண்ணாடிக் கலன் உடைந்து விட்டது. கடைக்குச் சென்று “ரீபில்” [REFILL] கொடு என்று கேட்கிறோம்.
அதற்குத் தமிழில் என்ன பெயர் ?
மணி(முனை)த் தூவலில் [BALL POINT PEN] மை தீர்ந்து விட்டது.
கடைக்காரரிடம் “ரீபில்” தருமாறு கேட்கிறோம். ”ரீபில்” என்பதைத் தமிழில் எப்படி
அழைக்கலாம் ?
சிந்திக்க மறந்து
விட்டோமே !
“ரீபில்” என்றால் என்ன ? ஒன்று இருந்த இடத்தில்
அதை எடுத்துவிட்டு மற்றொன்றை மாற்றி இட்டால் அதுதான் “ரீபில்”. மாற்றாக இடுவதால் அதை “மாற்றீடு என்றும்
சொல்லலாம்.
ஆலையில் காப்புக்
குடுவையைத் {THERMOS
FLASK] தயாரிக்கும் போது, வெப்பத்தை வெளியே விடாத உள்ளீடற்ற இரட்டைச் சுவர் அமைந்த கண்ணாடிக் கூடு [SHELL] ஒன்று குடுவைக்குள்
வைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதற்கு “ஷெல்” என்று பெயர்.
இந்த “ஷெல்” உடைந்து விட்டால், உடைந்ததை எடுத்துவிட்டு
புதிய “ஷெல்” ஒன்றைக் கடைக்காரர்
குடுவைக்குள் பொருத்தித் தருகிறார்.
முன்பு இருந்த “ஷெல்”லுக்கு மாற்றாக இதைப்
பொருத்துவதால் இதற்கு ஆங்கிலத்தில் “ரீபில்” என்று பெயர்.
“ரீபில்” என்பதன் நேரடி மொழி
பெயர்ப்பு “மாற்றீடு” என்பது. நேரடி மொழி
பெயர்ப்புத் தான் செய்ய வேண்டுமா ? அப்படி எந்தவொரு கட்டாயமும் கிடையாது.
ஆலையில் முதலாவதாகப்
பொருத்தப் பெற்ற “ஷெல்” உடைந்து போய்விட்டால் அதை எடுத்துவிட்டுப் பின்னதாகப் பொருத்தப் பெறும்
ஒவ்வொரு “ஷெல்”லுமே “பின்னீடு” தான்.
பின்னதாக இடப் பெறுவது “பின்னீடு”. அவ்வளவு தான் !
ஆங்கிலத்தில் இதை “ரீபில்” என்கிறார்கள். நாம் இதை “பின்னீடு” என்போமே !
”மாற்றீடு” என்பதைவிடப் “பின்னீடு” என்பது சிற்றுருச் சொல்.
பொருள் நயமும் ஒலி நயமும் இருக்கின்றன !
எனவே ஆங்கிலத்தில் “ரீபில்” என்பதை இனி தமிழில் “பின்னீடு” என்றே சொல்வோம் ! “பின்னீடு”டன் இணைந்து உருவாகும்
வேறு சில சொற்களையும் அறிந்து கொள்வோமே !
========================================================
|
|
THERMOS FLASK REFILL |
= குடுவைப் பின்னீடு |
BALL POINT PEN REFILL |
= மணித் தூவல் பின்னீடு |
HARLICKS REFILL PACK |
= ஆர்லிக்சு பின்னீடு |
REFILL PACK |
= பின்னீட்டுப்பொதி |
========================================================
BALL POINT................................ = மணி முனை
PEN................................................
= தூவல்
BALL POINT PEN........................= மணித்தூவல்*
*சுருக்கமாக மணித்தூவல்.
========================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052 ; சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
========================================================
பின்னீடு = REFILL. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக