ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

திங்கள், 20 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (54) அறைகலன்கள் = FURNITURES.

அறைகலன் = FURNITURE.

-------------------------------------------------------------------------------------------

நாம் அமர்வதற்கும், எழுதுவதற்கும், துயில்வதற்கும், புத்தகங்களைப் பாதுகாப்பதற்கும், ஆவணங்களை வைப்பதற்கும் சில பொருள்களைப் பயன் படுத்துகிறோம். அவற்றை ஆங்கிலத்தில்  “FURNITURE’  என்றும் தமிழில் தட்டு முட்டுச் சாமான்கள் என்றும் சொல்கிறோம் !


இத்தகைய தட்டுமுட்டுச் சாமான்கள் மரத்தினாலும்இரும்பினாலும் செய்யப்படுகின்றன. FURNITURE என்பதைத் தட்டுமுட்டுச்சாமான் என்று சொல்வது அத்துணைப் பொருத்தமாகவும் ஒலிநயம் மிக்க சொல்லாகவும் இல்லைஅத்துடன்அச்சொல்லின் நீண்ட  வடிவமும் கையாளுவதற்கு இடையூறாக அமைகிறது !

 

FURNITURE என்பதைத் தமிழில் சொல்ல வேறொரு பொருத்தமான சொல் தேவையாக இருந்ததுஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீஇராமலிங்கனார் 1974 –ஆம் ஆண்டு எழுதிய “ஆட்சித் துறைத் தமிழ்” என்னும் நூலின் மூலம் ”அறைகலன்” என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார் !

 

அன்று முதல் அரசு அலுவலகங்களில் ”FURNITURE" என்பதை “அறைகலன்” என்று பேசவும் எழுதவும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் போதுமான முன்னேற்றம் இல்லை. தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர்களுக்கு அறைகலன்” என்னும் சொல்லை அறிமுகப் படுத்திடவே இக்கட்டுரை வடிக்கப்படுகிறது !


ஆங்கிலத்தில் சொல்லப்படும் TABLE, CHAIR, ALMIRAH, RACK, SHELF, COT, CASH CHEST, WALL COFFER, TEA-POY அனைத்துமே FURNITURE வகையைச் சேர்ந்ததே. இவற்றைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ? பார்ப்போமா ?


நான்கு கால்களை உடையது நாற்காலிஆனால் நான்கு கால்கள் இல்லாத நாற்காலிகளும் இருக்கின்றனஇதற்காகப் புதுச் சொல் தேடி அலையவேண்டாம்.  காரண இடுகுறிப் பெயராக  ”நாற்காலி” இருந்துவிட்டுப் போகட்டும். நாற்காலி என்னும் சொல்லையே இருத்திக்  கொள்வோம் ! நாற்காலியின் வகைகளை மட்டும் தமிழாக்கம் செய்வோம் !


========================================================

 

CHAIR..........................................= நாற்காலி

FOLDING CHAIR.......................= மடக்கு நாற்காலி

“S” TYPE CHAIR........................=. வளைகால் நாற்காலி

PUG-PROOF CHAIR...................= பூச்சி புகா நாற்காலி

RATTAN SEATED CHAIR..........= பிரம்பிழை நாற்காலி

NYLON SEATED CHAIR............= வேதியிழை நாற்காலி

NYLON BODY CHAIR................= வேதி நாற்காலி

 [நைலான் என்பது ஒருவேதிப்பொருள்]

 ARM-LESS CHAIR.......................= கையிலா நாற்காலி

BASKET CHAIR............................= கூடை நாற்காலி

CUSHION CHAIR..........................= மெத்தை நாற்காலி

DINING CHAIR..............................= அவிழக நாற்காலி

 (அவிழ் = உணவு; அகம் = கூடம்; = உணவுக்கூடம்)

REVOLVING CHAIR......................= சுழல் நாற்காலி

 

 =============================================

 

அலுவலகங்களில் கோப்புகளை வைக்கவும்அவற்றில் எழுத்துப் பணிகளை மேற்கொள்ளவும் நான்கு கால்கள் மேல் நிலைநிறுத்திய பலகையைப் பயன்படுத்துகிறோம்அந்தப் பலகையின் மிசைப் பகுதி (மேற்பகுதிதான் முழுப் பயனையும் தருகிறது. (மீமிசை என்னும் சொல்லைக் கேள்விபட்டிருக்கிறீர்களா ? ”மீ” என்றாலும், “மிசை என்றாலும் “மேலே” என்றுதான் பொருள் !)

 

அந்தப் பலகையின் மிசைப் பகுதியில் வைத்து கோப்புகளில் எழுதலாம்கணினியை வைத்து இயக்கலாம்செய்தித் தாள்களை வைத்துப் படிக்கலாம்முதன்மைத் தேவைக்குரிய சில புத்தகங்களை அடுக்கி வைக்கலாம்தூவல் (PEN), வன்னிகை (PENCIL), போன்ற எழுது கருவிகளை வைத்துக்கொள்ளலாம்இந்த மிசைப் பலகை தான்காலப் போக்கில் “மேசை” ஆகி இந்தியில் “மேஜ்” ஆகி இருக்கிறது. “மேசை” என்பது “மிசை” என்பதன் மரூஉஆகையால், “மேசை” தமிழ்ச் சொல்லே ! மேசையின் வகைகளைப் பார்ப்போமா !

 

 =====================================================

 

SINGLE DRAWER TABLE..........= ஓரறை மேசை

DOUBLE DRAWER TABLE........= ஈரறை மேசை

JUNIOR CLERK’S TABLE..........= சீறகல மேசை

[ சிறுமை + அகலம் = சீறகலம் = அகலம் குறைவான]

 SENIOR CLERK”S TABLE..........= இடையகல மேசை

[ இடையகலம் = MEDIUM  BREADTH]

 OFFICER’S TABLE......................= பேரகல மேசை

[பேரகலம் = மிகையகலம்]

DRAWING TABLE........................= வரைவு மேசை

WOODEN TABLE.........................= மரமேசை

STEEL TABLE...............................= இரும்பு மேசை

DINING TABLE.............................= ஊமணை / அவிழக மேசை

[ ஊ = உணவு : மணை = பலகை ] [அவிழ்+ அகம்]

 

==========================================

 அறைகலன்களின் வேறு சில வகைகளைப்  பார்ப்போமா !

 ====================================================

 

ALMIRAH......................................= நிலைப்பேழை

WOODEN ALMIRAH...................= மரநிலைப்பேழை

STEEL ALMIRAH..........................= இரும்பு நிலைப்பேழை

RACK...............................................= நிலையடுக்கு

BUREAU..........................................= நிலையறைப் பேழை

SIDE RACK.....................................= மருங்கடுக்கு

PIGEON HOLE RACK...................= புறாப்புழை அடுக்கு

BOOK RACK...................................= நூலடுக்கு

BOOK SHELF..................................= நூற்பேழை

WALL RACK...................................= சுவர்மாடம்

WALL COFFER..............................= சுவர்ப்பேழை

CASH CHEST..................................= பணப்பேழை

SOFA................................................= ஈரணை

SOFA CUM BED..........................  .= ஈரணைப்பாயல்

TEA-POY.........................................= தேநீர் மேசை

COT..................................................= கட்டில்

SINGLE COT...................................= சிற்றகல் கட்டில்

[அகல் = அகலம்]

MEDIUM COT.................................= இடையகல் கட்டில்

DOUBLE COT.................................= பேரகல் கட்டில்

FAMILY COT...................................= குடும்பக்கட்டில்

STOOL..............................................= குறுங்காலி

HIGH STOOL..................................= நெடுங்காலி

SHORT STOOL...............................= குட்டைக்காலி

TRIPOD............................................= முக்காலி

 

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.:2052: சிலை (மார்கழி)05]

{20-12-2021}

--------------------------------------------------------------------------------------------



      

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக