விரும்பும் பதிவைத் தேடுக.

புதன், 8 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (10) குயிலி = DRILL BIT.

  

குயிலி = DRILL BIT

--------------------------------------------------------------------------------------


மரத்தில் துளை இடுவதற்குத் துரப்பணம் என்ற கருவி பயன்படுவது போல் இரும்பில் துளையிட, டிரில் பிட் (Drill Bit) என்ற கருவி பயன் படுகிறது. இந்தக் கருவியைத் தமிழில் எவ்வாறு அழைப்பது ? சிலர் துளையுளி என்கின்றனர். வேறு சிலர் துளையிடும் கருவி என்கின்றனர். இன்னும் சிலர் துளைப்பான் என்கின்றனர் !



புதிதாக ஒரு சொல் உருவாக்கும் போது, அது சுருங்கிய வடிவினதாகவும், பொருள் பொதிந்ததாகவும், ஒலி நயம் உடையதாகவும் அமைந்தால் அச்சொல் நிலைத்து நிற்கும் !

       

முற்காலத்தில், முத்துக்களை மாலையாகக் கோப்பதற்கு வசதியாக அதில் மெல்லிய துளை வழி ( through hole ) இடுவது வழக்கம். இத்தகைய துளையிடும் பணியைச் செய்தோர் குயினர் என்று அழைக்கப் பட்டனர். குயிலல் செய்தவர்கள் குயினர் ஆயினர்.  குயில் ‘ , “ குயிலல் “ , “ குயிலுதல்என்ற சொற்கள் எல்லாம்  துளைத்தல் என்பதைக் குறிக்கும் சொற்களே !

 


"குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் என்பது மதுரைக் காஞ்சி என்னும் இலக்கியத்தில் வரும் பாடல் வரி  ! (வரி : 474)

         
கோடுபோழ் கடைநரும், திருமணிக் குயினரும்...
 என்பதும் இதே இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரி  !  (வரி: 511)

       
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்
 என்று நெடுநல் வாடை என்னும் இலக்கியமும் பேசுகிறது ! ( வரி: 88)

       
குயில் ( துளைத்தல் ) என்னும் வினையப் புரிகின்ற கருவியை குயிலி என்று கூறுதல் பொருத்தமாக அமையும் அல்லவா ? இனிமேல் டிரில் பிட் (Drill Bit) என்பதை குயிலி என்றே அழைப்போமே !! சுருங்கிய வடிவம் ; ஒலி நயம் ; பொருள் ஆழம் . வேறு என்ன வேண்டும் ?

         
குயிலி என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் !!!

 

==============================================



DRILL BIT..............................



= குயிலி


STRAIGHT SHANK DRILL BIT............................................



= செங்காற் குயிலி


TAPER SHANK DRILL BIT............................................



= கணைக்காற் குயிலி


TWIST DRILL........................


= சுழற் பீலிக் குயிலி


COMBINATION CENTER DRILL......................................



= குழிப்புக் குயிலி


DRILL CHUCK......................


= குயிலிச் சிமிழி


DRILL
  BRACE......................


= குயிலிச் சூரல்


DRILLING MACHINE...................................



= குயிற் பொறி


HAND DRILLING MACHINE


= கைக் குயிற் பொறி


BENCH DRILLING
MACHINE..................................



= விசிக் குயிற் பொறி


PILLAR DRILLING MACHINE..................................



= நிலைக் குயிற் பொறி


RADIAL DRILLING MACHINE..................................



= சுழற் குயிற் பொறி

 

=============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

 ”புதிய தமிழ்ச் சொல்” முகநூல்,

[தி.ஆ:2052, நளி (கார்த்திகை) 22]

{08-12-2021}

 

=============================================

குயிலி = DRILL BIT.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக