ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

செவ்வாய், 30 நவம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (02) கதுவை = VICE.


கதுவை = VICE 

-------------------------------------------------------------------------------------

 

பணிமனைகளில் எந்தப் பொருளையும் திருத்தம் செய்வதற்கு முன்பு அதை நழுவாமல் இறுக்கமாகக் கவ்விப் பிடிப்பதற்கு வைஸ் (Vice) என்னும் பிடிகருவியைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள் !

 

 

இந்தக் கருவியின் தாடைகளுக்கு இடையில் திருத்தம் செய்ய வேண்டிய பொருளை நிறுத்தி, தாடைத் திருகு மூலம் இறுக்கி விட்டால், முதலைப் பிடிதான். பொருள் நழுவ முடியாது !

 

 

இறுக்கமாகக் கவ்விப் பிடித்தல் என்பதைக் குறிக்கத் தமிழ் இலக்கியங்களில் கதுவு “ , “ கதுவுதல் என்னும் சொற்கள் கையாளப் பட்டுள்ளன. பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை  என்பது பெரும் பாணாற்றுப் படை என்னும் இலக்கியத்தில் காணப்படும் வரி !  (வரி : 287).

 


இதே இலக்கியத்தில் வேறு ஒரு இடத்தில் கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை என்ற வரி வருகிறது  !  (வரி ; 471)

 

 

வைஸ் என்பதை பிடிச்சிராவி “ “ பிடிப்பான் “ “ பிடி தண்டு என்று பலவாறாக அழைக்கின்றனர். இவற்றில் ஒலி நயமும் இல்லை; சுருங்கிய வடிவும் இல்லை !

 

 

கதுவும் (கவ்விப் பிடிக்கும்)  செயலைச் செய்கின்ற கருவியைக் கதுவை என்று அழைக்கலாமே ! பொருள் நயமும் இருக்கிறது ! ஒலி நயமும் இருக்கிறது ! சுருங்கிய வடிவும் இருக்கிறது ! கதுவையின் அடிப்படையில் பிறக்கின்ற பிற சொற்களையும் பாருங்கள் !



=========================================

 

VICE.............................. .= கதுவை
BENCH VICE..................= விசிக் கதுவை
LEG VICE........................= நிலைக் கதுவை
MACHINE VICE........................= பொறிக் கதுவை
PIPE VICE.................................= புழல் கதுவை
CARPENTER'S VICE...............= தச்சுக் கதுவை
PNEUMATIC VICE...................= காற்றியல் கதுவை.
HAND VICE...............................= கைக்கதுவை

 

==============================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ.

[தி.ஆ:2052. நளி (கார்த்திகை) 14]

{30-11-2021}

 

==============================================

விசிக் கதுவை = BENCH VICE