நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்வயல் என்னும் சீறூரில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி. ஒருநாள் பத்தாம் வகுப்பில் ஆசிரியருக்கும் பரிதி என்னும் மாணவருக்குமிடையே நடைபெறும் ஒரு உரையாடல் பதிவு !
-------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : பரிதி ! ”செல்போன்” (Cell phone) என்பதைத் தமிழில் எவ்வாறு சொல்லலாம் ?
பரிதி....... : ஐயா ! “செல்போன்” என்பதற்குத் தமிழில் பல சொற்கள் உள்ளன. “அலைபேசி”, “செல்பேசி”, “செல்லிடப் பேசி”, ”கைப்பேசி” “எழினி”, இப்படிப் பல சொற்கள். இருந்தாலும் என்னைக் கவர்ந்த சொல் “எழினி” தான் !
ஆசிரியர் : ஏன் ? “எழினி” என்ற சொல்லுக்கு விளக்கம் சொல் பார்ப்போம் ?
பரிதி....... : சொல்கிறேன் ஐயா ! “செல்போனில்” முதன்மைப் பகுதியாக (Primary part) இருப்பது அதன் முகப்புத் திரை. (Display Screen) அந்தத் திரையில் தான் நாம்
தொடர்பு கொள்பவருடைய ”செல்போன்” எண்கள் (Numbers) பதிவாகின்றன !
ஆசிரியர் : அப்புறம் ?
பரிதி............: நமது “செல்போனில்” என்னென்ன செயலிகள்(Apps) இருக்கின்றன என்பதை இந்த
முகப்புத் திரை தான் நமக்குக் காட்டுகிறது .செயலியின் உள்ளே நுழைந்தால், பெயர்ப் பட்டிகள் (Menu) தோன்றி, தேவையான துணைப் பட்டிகளையும்
(Sub-Menu) இந்தத் திரை தான்
காண்பிக்கிறது. அதிலிருந்து விரும்பும் ஒன்றைத் தெரிவு செய்து, அதன் பயனைத் நாம் துய்க்க
முடிகிறது !
ஆசிரியர் : வேறென்ன சொல்லப்போகிறாய் ?
பரிதி..........: ”செல்போன்” மூலம் தொலைக் காட்சிச்
செய்திகளை ( News
) இந்தத்
திரையில் தான் பார்க்கிறோம்.நாம் சேமித்திருக்கும் நிழம்புகளை (Photos)ப் பார்க்கிறோம் ! ஏன் ! திரைப் படம் கூடப்
பார்க்க முடிகிறதே இந்தத் திரையில் ! மறு முனையில் பேசுபவர் உருவம் கூட இந்ததிரை
மூலம் நமக்குத் தெரிகிறதே !
ஆசிரியர் : ஆமாம் ! “எழினி” என்பதன் பெயர்க் காரணம்
சொல்ல வில்லையே நீ ?
பரிதி..........: சொல்கிறேன் ஐயா ! “செல்போனின்” முதன்மைப் பகுதியே இந்த
முகப்புத் திரை தானே ?
ஆசிரியர் : ஆமாம் !
பரிதி......... : இந்த ”திரை” என்னும் சொல்லுக்கு “எழினி” என்றொரு மாற்றுச் சொல்லும்
தமிழில் உண்டு.“செல்போனில்” திரை என்பது அதனுடைய ஒரு
உறுப்பு. இந்த முதன்மையான உறுப்பின் பெயரையே ”செல்போன்” என்னும் கருவிக்குச் சூட்டலாமே ஐயா !
ஆசிரியர் : இலக்கணப்பபடி அது சரியா ?
பரிதி......... : சரிதான் ஐயா ! “தலைக்குப் பத்து உருபா கொடு
!” என்னும் சொற்றொடரில் தலை
என்னும் உறுப்பின் (சினை) பெயர், பத்து உருபா கொடு என்னும் குறிப்பினால், தலையை உடைய மனிதர்களுக்குக் கொடு என்ற பொருள் படுகிறது அல்லவா ? இச் சொற்றொடரில் “தலை” என்னும் உறுப்பின் (சினையின்) பெயர் தலையை உடைய
மனிதனுக்கு ஆகி வந்தமையால், இலக்கணத்தில் இதை “சினையாகு பெயர்” என்று சொல்கிறோம். அது போன்று “எழினி” என்னும் உறுப்பின் (சினை) பெயர், அந்த உறுப்பினை உடைய ”செல்போன்” என்னும் கருவிக்கு ஆகி வருவதால், இதுவும் ”சினையாகு பெயர் ” ன்னு இலக்கணத்தின்படி அமைகிறது. ஆகையால் “செல்போன்” என்பதை, இனி “எழினி” என்றே சொல்வோமே ஐயா!
ஆசிரியர் : ஆகா ! அருமை ! அருமை ! உன் ஆய்வு மிகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்து களிப்பைத் தருகிறது ! உன் தமிழ்த் தொண்டுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள் !
பரிதி......... : ஐயா ! ”எழினி” என்னும் இந்தச் சொல்லை எனக்கு உரைத்து, அதற்கான காரணத்தையும்
எடுத்து உரைத்தவர் தமிழ்ப் பணி மன்றம் என்னும் முகநூல் குழுவின் ஆட்சியர் அவர்கள்
தான் ! தங்கள் பாராட்டு அவரைத்தான் சாரும் ஐயா !
ஆசிரியர்: அப்படியா ? அவருக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் என்
சார்பாகச் சொல்லி விடு பரிதி !
பரிதி....... : சரி ! சொல்கிறேன் ஐயா ! வணக்கம் !
==============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
===================================================
எழினி = CELL PHONE. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக