” பூச்சரம் புறவம் ”
உங்களுக்குத் தெரிந்த முகநூல் நண்பர்தான். அவர் சில நாள்கள் முன்பு
தமிழ்ப் பணி மன்றத்தில் விடுத்திருந்த ஒரு பதிவில் ON-LINE, OFF-LINE இரண்டுக்கும் அழகிய, பொருத்தமான தமிழ்ச் சொற்களைச்
சொல்லுங்களேன் என்று மன்ற நண்பர்களிடம் கேட்டிருந்தார்!
இண்டர்நெட் எனப்படும் வலைத்தளம் இன்றைய புத்துலகில் தவிர்க்க முடியாத ஒரு பேராற்றலாக உருவெடுத்துள்ளது., மனிதன், தான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, வலைத் தளங்கள் மூலம், விரும்பும் செய்திகளை எல்லாம் ஈர்த்துப் பார்க்க முடிகிறது !
இதில் அண்மைக்கால முன்னேற்றம் வலைத்தளம் மூலம் வணிகம் செய்தல். இதற்காகவே பல செயலிகள் (Apps) உருவாக்கப் பட்டுள்ளன !
“ON, OFF” என்ற இந்த இரண்டு சொற்களையும் வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்கள் புனைந்திருக்கும் சொற்கள் ஏராளம் ஏராளம். ON DUTY x OFF DUTY ; ON SHORE x OFF SHORE ; ON SIDE x OFF SIDE ; ON LINE x OFF LINE, இன்னும் இவை போன்று பலப் பல உள்ளன !
இவற்றின் சரியான பொருளைப் புரிந்து கொள்வது என்பது ஆங்கிலத்தின் அடி வருடிகளுக்குக் கூட ஆகாத செயல். மம்மி, டாடியைத் தத்து எடுத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலப் பள்ளியின் வார்ப்புக்களுக்கும் இவற்றுக்குப் பொருள் புரியா !
முகநூலுக்கான முதன்மைத் செய்திக் களஞ்சியம் (MAIN SERVER) அமெரிக்காவில் இருக்கிறது. நாம் விடுக்கும் செய்தி இந்தக் களஞ்சியத்துக்குப் போய் பதிவாகி, மீண்டும் நமது கணினிக்கே வருகிறது. நம்மால் பார்க்க முடிகிறது. இது எவ்வாறு இயலுகிறது?
இந்தியாவில் , பெங்களூர், புனே, கல்கத்தா, சண்டிகர் ஆகிய நான்கு இடங்களில் இந்தியத் தொலைத் தொடர்புத் துறையின் வலைத் தளக் களஞ்சியங்கள் (INTER NET SERVERS) உள்ளன. நாம் முகநூலில் இடும் ஒரு பதிவு பெங்களூரில் இருக்கும் வலைத் தளக் களஞ்சியம் (SERVER) மூலம் வான்கோள் (SATELITE) வழியாக அமெரிக்காவில் உள்ள முகநூல் நிறுவனத்தின் முதன்மைத் செய்திக் களஞ்சியத்திற்குச் செல்கிறது !
அங்கு நமது செய்தியை ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் மீண்டும் சென்ற வழியே திரும்பி வருகிறது. நமது கணினியில் நாம் விடுத்த செய்தியை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது வலைத்தளம் (INTERNET). நமது செய்தி வலை வழியே செல்கிறது; ஏற்கப்பட்ட செய்தி வலை வழியே மீள்கிறது !
”பிலிப்கார்ட்”. போன்ற நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை (ON LINE TRADING) வலைத்தளம் வழியாகத்தான் மேற்கொள்கின்றன. நமக்கு வேண்டிய பொருளை அனுப்புமாறு வலைத்தளம் வழியாக, நாம் கேட்கிறோம். அவர்கள் பொருளை நமது வீட்டில் கொண்டு வந்து தந்து விட்டு, உரிய பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இரு முனைச் செயல்பாடுகளும் வலைத் தளம் வழியாகவே மேற்கொள்ளப் படுகின்றன !
வலைத் தளம் (INTER NET) வழியாகவே இவை போன்ற பணிகள் நடைபெறுவதால், ON LINE என்பதை ”வலைத் தள வழி” என்று கூறலாம். இதை இன்னும் சுருக்கமாக “வலை வழி” (ON LINE) என்று அழைக்கலாம் !
”ஆன் லைன்” என்பது “வலை வழி” என்றால் “ஆப்லைன்” (OFF LINE) என்பதை என்னவென்று சொல்லலாம் ? ”ஆன் லைன்” அல்லாத வழி எவை எல்லாம் இருக்கின்றனவோ அவை எல்லாமே “ஆப் லைன்” தான் !
தமிழில் “அல்” என்ற சொல்லுக்கு “அல்லாத” என்றும் ஒரு பொருள் உண்டு. இதை வைத்துத் தான் “அல் வழிப் புணர்ச்சி”, “அல் வழக்கு”, ”அல் மொழித் தொகை” (அன்மொழித் தொகை) போன்ற சொற்கள் உருவாகியுள்ளன!
“ஆன் லைன்” என்பதை “வலைவழி” என்போமானால் “ஆப் லைன்” என்பதை “வலை அல்லாத வழி” என்று சொல்லலாம் அல்லவா ? இதையே இன்னும் சுருக்கமாக ”வலையல் வழி” (வலை + அல் + வழி = வலையல் வழி) அல்லது இன்னும் சுருக்கமாக “அல்வழி” என்று கூறலாம் !
எனவே ON LINE என்பதை இனி “வலை வழி” என்போம். OFF LINE என்பதை “அல் வழி” என்போம் !
நண்பர் பூச்சரம் புறவம் அவர்கள்
தெரிவித்த “இணைவு”
“அணைவு” என்னும் சொற்கள் மின் இணைப்புச்
சுற்றில் வருகின்ற ஆளியை (Switch) “ON” செய்தல் ,
“OFF” செய்தல் ஆகிய பணிகளுக்கு மிகப் பொருத்தமான சொற்களாக அமைகின்றன
என்பதையும் தெரிவிக்க விழைகிறேன்.
=============================================
ON-LINE
CLASS..................... = வலைவழி வகுப்பு
=============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புதிய தமிழ்ச் சொல் ” வலைப்பூ.
[தி.ஆ: 2052, நளி (கார்த்திகை) 15]
{01-12-2021}
=============================================
அல்வழி ; வலைவழி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக